முழு அடைப்புப் போராட்டம்: 32 இடங்களில் மறியல்: 5 எம்எல்ஏக்கள் உள்பட 1,500 பேர் கைது

தில்லியில் போராடிய தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அனைத்துக் கட்சியினர் முழு அடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தில்லியில் போராடிய தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அனைத்துக் கட்சியினர் முழு அடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையொட்டி, திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர் உள்பட மாவட்டம் முழுவதும் 32 இடங்களில் நடைபெற்ற மறியல் போராட்டங்களில் திமுக எம்எல்ஏக்கள் 5 பேர் உள்பட மொத்தம் 1,500 பேர் கைது செய்யப்பட்டனர்.
நதிநீர் இணைப்பு, விவசாய கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் தில்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை அனைத்துக் கட்சி சார்பில் முழு அடைப்புப் போராட்டம், ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றன.
திருவண்ணாமலை மாவட்டத்தில் முழு அடைப்புப் போராட்டத்தையொட்டி, பெரும்பாலான கடைகள், வர்த்தக நிறுவனங்கள், உணவகங்கள், பெட்டிக் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால், திருவண்ணாமலை பெரிய தெரு, திருவூடல் தெரு, மண்டித் தெரு உள்ளிட்ட பல்வேறு சாலைகள் வாகனப் போக்குவரத்து, மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.
திருவண்ணாமலையில்...: திருவண்ணாமலை, சின்னக்கடைத் தெருவில் உள்ள தியாகிகள் நினைவுத் தூண் அருகில் இருந்து முன்னாள் அமைச்சரும், திமுக எம்எல்ஏவுமான எ.வ.வேலு தலைமையில் அனைத்துக் கட்சியினர் பேரணியாகச் சென்றனர்.
திமுக மாவட்ட அவைத் தலைவர் த.வேணுகோபால், காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ பி.எஸ்.விஜயகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலக்குழு உறுப்பினர் எம்.வீரபத்திரன், மாவட்டச் செயலர் எம்.சிவக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் கு.ஜோதி உள்பட அனைத்துக் கட்சி நிர்வாகிகள் பலர் பேரணியில் கலந்து கொண்டனர்.
முத்துவிநாயகர் கோயில் தெரு, சின்னக்கடைத் தெரு, போளூர் சாலை வழியாக திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் எதிரே சென்ற அனைத்துக் கட்சியினர், அங்கு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, எம்எல்ஏ எ.வ.வேலு தலைமையில் முன்னாள் நகர்மன்றத் தலைவர் இரா.ஸ்ரீதரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சி.என்.அண்ணாதுரை, நகரச் செயலர் ப.கார்த்திவேல்மாறன், நகராட்சி குழுத் தலைவர் குட்டி க.புகழேந்தி, அனைத்து அமைப்புசாரா தொழிற்சங்கங்களின் மாவட்டத் தலைவர் எ.ஏ.ஆறுமுகம் உள்பட ஏராளமான திமுகவினரை போலீஸார் கைது செய்தனர்.
வந்தவாசியில்...: வந்தவாசி நகரில் சுமார் 90 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மேலும், தெள்ளாறு, தேசூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அரசு, தனியார் பேருந்துகள் பெரும்பாலும் இயங்கின. இதையொட்டி, திமுக, காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் பங்கேற்ற ஊர்வலம் வந்தவாசியில் நடைபெற்றது. வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமார், திமுக மாவட்ட அவைத் தலைவர் கே.ஆர்.சீதாபதி, மாவட்ட துணைச் செயலர் எம்.எஸ்.தரணிவேந்தன், நகரச் செயலர் கோட்டை பாபு, ஒன்றியச் செயலர்கள் டி.டி.ராதா, ப.இளங்கோவன், சுரேஷ்கமல், நந்தகோபால், காங்கிரஸ் நகரத் தலைவர் என்.ஜெகன்நாத், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவர் அப்துல்காதர்ஷரீப் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
வந்தவாசி ஐந்து கண் பாலம் அருகிலிருந்து ஊர்வலமாக புறப்பட்ட போராட்டத்தினர் திண்டிவனம் சாலை, தேரடி, பஜார் வீதி வழியாக பழைய பேருந்து நிலையம் வரை சென்று அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, 87 பேரை போலீஸார் கைது செய்தனர். இதேபோல, தெள்ளாறு பகுதியில் 75 பேரும், தேசூர் பகுதியில் 45 பேரும் சாலை மறியலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டனர்.
மேலும், வந்தவாசி தேரடியில் சாலை மறியலில் ஈடுபட்டதாக தமிழக கரும்பு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த 36 பேர் கைது செய்யப்பட்டனர்.
செங்கத்தில்...: செங்கத்தில் திமுக எம்எல்ஏ மு.பெ.கிரி தலைமையில், செங்கம் - போளூர் சாலையில் இருந்து அனைத்துக் கட்சியினர் ஊர்வலமாக துக்காப்பேட்டை புதிய பேருந்து நிலையம் வரை வந்தனர். பின்னர், புதிய பேருந்து நிலையத்தில் மறியலில் ஈடுபட்ட அவர்களை செங்கம் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஷாஜித்தா தலைமையிலான போலீஸார் கைது செய்தனர். இதில் எம்எல்ஏ கிரி, ஒன்றியச் செயலர்கள் பிரபாகரன், அண்ணாமலை, நகரச் செயலர் சாதிக்பாஷா மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்தோர் உள்பட சுமார் 200 பேர் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
செய்யாறு, போளூரில்...: செய்யாறில் காந்தி சாலை உள்பட பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மேலும், செய்யாறு பேருந்து நிலையம் அருகே மறியலில் ஈடுபட்ட திமுக மற்றும் தோழமை கட்சியினர் 74 பேரை போலீஸார் கைது செய்தனர்.  இதேபோல, விவசாயிகளுக்கு ஆதரவாக போளூர், கலசப்பாக்கம் பகுதிகளில் கடைகள் முழுவதுமாக அடைக்கப்பட்டிருந்தன. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
ஆரணி: ஆரணியில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக செயலர் ஆர்.சிவானந்தம் தலைமையில், திமுக நகரச் செயலர் ஏ.சி.மணி, ஒன்றியச் செயலர்கள் தட்சிணாமூர்த்தி, சுந்தர், ஓட்டல்குமார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ம.கு.பாஸ்கரன், முத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சி.அப்பாசாமி, கண்ணன், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சைதை சம்பந்தம் உள்ளிட்டோர் மறியலில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, மறியலில் ஈடுபட்ட 122 பேர் கைது செய்யப்பட்டனர்.
மற்ற இடங்களில்: இதேபோல, வேட்டவலத்தில் எம்எல்ஏ கு.பிச்சாண்டி தலைமையிலும், கலசப்பாக்கத்தில் திமுக சொத்து பாதுகாப்புக் குழு செயலர் பெ.சு.திருவேங்கடம் தலைமையிலும், புதுப்பாளையத்தில் மாவட்ட துணைச் செயலர் சி.சுந்தரபாண்டியன் தலைமையிலும், தண்டராம்பட்டில் ஒன்றியச் செயலர் கோ.ரமேஷ் தலைமையிலும் ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றன.
5 எம்எல்ஏக்கள் உள்பட 1,500 பேர் கைது: மாவட்டம் முழுவதும் செவ்வாய்க்கிழமை மொத்தம் 32 இடங்களில் சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏக்கள் எ.வ.வேலு (திருவண்ணாமலை), கு.பிச்சாண்டி (கீழ்பென்னாத்தூர்), மு.பெ.கிரி (செங்கம்), கே.வி.சேகரன் (போளூர்), எஸ்.அம்பேத்குமார் (வந்தவாசி) மற்றும் அனைத்துக் கட்சியினர் உள்பட மொத்தம் 1,500 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் அந்தந்த பகுதி திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com