கலாமைப் போல சாதனை படைக்க கனவு காணுங்கள்: மாணவர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் அறிவுரை

அப்துல் கலாமைப்போல சாதனை படைக்கும் வகையில் கனவு கண்டு வாழ்க்கையில் உயர வேண்டும் என்று பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி

அப்துல் கலாமைப்போல சாதனை படைக்கும் வகையில் கனவு கண்டு வாழ்க்கையில் உயர வேண்டும் என்று பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி
அலுவலர் வெ.ஜெயக்குமார் அறிவுரை வழங்கினார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 2-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, தினமணி நாளிதழும், திருவண்ணாமலை கீழ்அணைக்கரையில் உள்ள எஸ்.முருகையன் நினைவு முன்மாதிரி மழலையர், தொடக்க மற்றும் மேல்நிலைப் பள்ளியும் இணைந்து பள்ளி மாணவ, மாணவிகளிடையே பல்வேறு போட்டிகளை கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி நடத்தின.
மாணவர்களின் கனவு நாயகன் என்ற தலைப்பில் நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரை, ஓவியம், கவிதை, கையெழுத்துப் போட்டிகளில் 3-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசு வழங்கும் விழா வெள்ளிக்கிழமை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளித் தலைவர் சீனி.கார்த்திகேயன் தலைமை வகித்தார். பள்ளித் தாளாளரும், செயலருமான அருள்விழி கார்த்திகேயன், நிர்வாக இயக்குநர் என்.காயத்ரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் ஏ.சீனிவாசன் வரவேற்றார்.
திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசு, சான்றிதழ்கள் வழங்கினார். தொடர்ந்து, மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை வழங்கி வெ.ஜெயக்குமார் பேசியதாவது:
கனவு காணுங்கள் என்று கலாம் சொல்வார். கலாம் சொல்லும் கனவு தூக்கத்தில் இருக்கும்போது வருவது அல்ல. நம்மை தூங்கவே விடக்கூடாது. அந்தக் கனவு நாம் எதிர்காலத்தில் என்னவாகப்போகிறோம் என்பதுதான். எதிர்காலத்தில் நாம் ஐஏஎஸ் ஆகலாம், மருத்துவர் ஆகலாம், பொறியாளர் ஆகலாம் என்ற கனவுதான் அது. இந்தக் கனவை நனவாக்க வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்துவிட்டால், அந்த இலக்கை அடையும் வரை உங்களுக்கு தூக்கமே வரக்கூடாது.
உன்னை மிகப்பெரிய சாதனையாளனாக மாற்றுவதற்கான கனவு இதுதான். இதுபோன்ற கனவைத்தான் கலாம் சொல்லி இருக்கிறார். இதுபோன்ற கனவை கலாம் சிறிய வயதிலேயே கண்டதால்தான் இன்றைக்கு இமாலய சாதனை படைத்து விட்டுச் சென்றுள்ளார். நீங்களும் கலாமைப்போல கனவு கண்டு வாழ்க்கையில் உயருங்கள் என்றார்.
போட்டித் தேர்வுக்கு உதவும் தினமணி: திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு தனி வட்டாட்சியர் டி.கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது:
இந்திய நாட்டின் எதிர்காலமே மாணவச் செல்வங்களாகிய உங்கள் கையில்தான் உள்ளது. நீங்கள் எல்லாம் நல்ல முறையில் படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும். போட்டித் தேர்வு எழுதுவோருக்குத் தேவையான தகவல்கள் எல்லாம் தினமணி நாளிதழில் இருக்கும்.
நான் குரூப் - 2 தேர்வுக்குப் படிக்கும்போது தினமணி நாளிதழை தொடர்ந்து படித்தேன்.
நான் தேர்வில் தேர்ச்சி பெற தினமணி பெரிதும் உதவியது. அப்துல் கலாம் சொன்னதுபோல நீங்கள் கனவு காண வேண்டும். அந்தக் கனவு நல்ல கனவாக, உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தும் கனவாக இருக்க வேண்டும். உண்மை, உழைப்பு, நேர்மை இருந்தால் வாழ்க்கையில் முன்னேறலாம் என்றார்.
பள்ளித் தலைவர் சீனி.கார்த்திகேயன் பேசியதாவது: கலாம் என்ற மிகப்பெரிய மனிதரை அழைத்து விழா நடத்தும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. சண்முகா தொழிற்சாலை கல்லூரியில் நடைபெற்ற விழாவில் மாணவர்கள் வெயிலில் காத்திருந்தனர். இதைப் பார்த்த கலாம், உடனே வெயிலில் இருந்த மாணவர்களை நிழலுக்குச் செல்லுமாறு கூறினார்.
மாணவர்கள் மீது கலாம் எந்த அளவுக்கு பாசம் வைத்திருக்கிறார் என்பதை நான் அப்போது கண்கூடாகப் பார்த்தேன். கலாம் ஆசிரியர்கள், மாணவர்கள் மட்டுமல்ல இந்திய நாட்டின் மீதும், நாட்டு மக்களின் மீதும் அபரிதமான அன்பு கொண்டிருந்தார். அவர் வழியை நாமும் பின்பற்ற வேண்டும் என்றார்.
விழாவில், மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்
கே.ஆனந்தன், தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் கே.ராஜேஷ், முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் சி.விஜயகுமார் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com