செங்கம் அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளைச் சரிசெய்யாவிட்டால் போராட்டம்: திமுக எம்எல்ஏ அறிவிப்பு

செங்கம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கான அடிப்படை வசதிகளை சரிசெய்யாவிட்டால், திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று எம்எல்ஏ மு.பெ.கிரி அறிவித்தார்.

செங்கம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கான அடிப்படை வசதிகளை சரிசெய்யாவிட்டால், திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று எம்எல்ஏ மு.பெ.கிரி அறிவித்தார்.
செங்கம் துக்காப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு போதுமான குடிநீர், கழிவறை வசதிகள் இல்லை என்றும், முறையாக மருத்துவச் சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என்றும் செங்கம் தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரிக்கு புகார்கள் சென்றனவாம்.
இந்நிலையில், செங்கம் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ மு.பெ.கிரி சனிக்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, கடந்த 2 நாள்களாக பெய்த மழைநீர் மருத்துவமனை வளாகத்தில் இருந்து வெளியேற வழியில்லாமல் குட்டையாக நேங்கி நின்றது தெரியவந்தது. இதையடுத்து, பொதுப்பணித் துறை அதிகாரியை தொடர்பு கொண்ட எம்எல்ஏ, உடனடியாக மருத்துவமனை வளாகத்தில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற கால்வாய்கள் அமைக்குமாறு உத்தரவிட்டார்.
பின்னர், உள்புற நோயாளிகளிடம் சென்று எம்எல்ஏ குறைகளை கேட்டறிந்தார். அப்போது, நோயாளிகளுக்கு போதுமான குடிநீர் வசதி இல்லை, கழிவறைகளில் தண்ணீர் இல்லாததால் பூட்டி வைக்கப்பட்டுள்ளன, குறித்த நேரத்துக்கு மருத்துவர்கள் வருவதில்லை, நோயாளிகளுக்கு சுகாதாரமான உணவுகள் வழங்கப்படுவதில்லை என நோயாளிகள் புகார் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் எம்எல்ஏ மு.பெ.கிரி கூறியதாவது: செங்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டுமெனவும், மருத்துவமனை வளாகத்தில் குடிநீர் பிரச்னையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மாவட்ட நிர்வாகத்திடம் ஏற்கெனவே கோரிக்கை விடுத்தேன்.
அதனடிப்படையில், நோய்த் தடுப்பு இயக்குநர் குழந்தைவேலு, மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே மற்றும் மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் மருத்துவமனையை அண்மையில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளனர். எனினும், அடிப்படை வசதிகளை செய்துகொடுக்க அதிகாரிகள் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, இன்னும் 15 நாள்களுக்குள் செங்கம் அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கப்படாவிட்டால் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார். உடன், ஒன்றியச் செயலர்கள் பிரபாகரன், அண்ணாமலை நகரச் செயலர் சாதிக்பாஷா, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com