பலத்த மழையால் ஆறுகளில் கரை புரண்டோடும் வெள்ளம்: போளூரில் 136.8 மி.மீ மழை

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை தொடர்ந்து பலத்த மழை பெய்ததால்,

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை தொடர்ந்து பலத்த மழை பெய்ததால், ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. மாவட்டத்தில் அதிகபட்சமாக போளூரில் 136.8 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இந்நிலையில், கடந்த சில வாரங்களாக மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகளில் தண்ணீர் தேங்கத் தொடங்கி உள்ளது.
திருவண்ணாமலை, வேங்கிக்கால், ஆட்சியர் அலுவலகம், போளூர், ஆரணி உள்பட மாவட்டம் முழுவதும் சனிக்கிழமை இரவு 12 மணிக்கு மழை பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து விடிய விடிய பெய்த பலத்த மழையால், சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியது.
மேலும், கரைப்பூண்டி பகுதியில் உள்ள செய்யாற்றில் மழை வெள்ளம் கரைபுரண்டோடியது. இதை ஏராளமான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.சிறுவர்கள் ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர்.
இதேபோல, ஆரணி கமண்டல நாகநதியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, இருகரையும்  தொட்டபடி தண்ணீர் சென்றது. இதனால் ஆரணி பகுதி மக்கள் ஏராளமானோர்  ஆற்றுப்பாலத்துக்கு சென்று வெள்ளத்தை பார்த்து ரசித்தனர்.
போலீஸார் எச்சரிக்கை: இந்நிலையில், ஒலிபெருக்கி மூலம் பொதுமக்கள், சிறுவர்கள் கமண்டல நாகநதியில் இறங்கிப் பார்க்கக்கூடாது. பாலத்தின் மீதும் கவனமாக இருக்குமாறு போலீஸார் எச்சரிக்கை செய்தனர்.
போளூரில் அதிகபட்ச மழை:  சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை மாவட்டத்திலேயே அதிகபட்சமாக போளூரில் 136.8 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
இதுதவிர, திருவண்ணாமலையில் 102.5, செங்கத்தில் 79.8, சாத்தனூர் அணைப் பகுதியில் 58, ஆரணியில் 9, வந்தவாசியில் 29.2, செய்யாறில் 19.5 மில்லி மீட்டர் பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com