படை வீரர் கொடி நாள் நிதி வசூல் ஊர்வலம்

திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் படை வீரர் கொடிநாள் நிதி வசூல் ஊர்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் படை வீரர் கொடிநாள் நிதி வசூல் ஊர்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7-ஆம் தேதியை படை வீரர் கொடி நாளாக இந்திய அரசும், மாநில அரசுகளும் கடைப்பிடிக்கின்றன. இந்தக் கொடி நாள் கடந்த 1949-ஆம் ஆண்டு முதல் இந்தியா முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
நாட்டைக் காக்கும் பணியில் ஈடுபடும் முப்படை வீரர்களின் குடும்ப நலன்களையும், முன்னாள் படை வீரர்களின் நலன்களையும் காக்கும் சமுதாயக் கடமையை நிறைவேற்றும் வகையில், கொடி விற்பனையின் மூலமும், நன்கொடைகள் மூலமூம் திரட்டப்படும் நிதியானது படை வீரர்களின் குடும்பத்தினரின் நல்வாழ்வுக்காகவும், உடல் உறுப்புகளை இழந்த வீரர்களின் மறுவாழ்வுப் பணிகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
இந்த நிலையில், திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் இருந்து புறப்பட்ட படை வீரர் கொடிநாள் நிதி வசூல் ஊர்வலத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தினசாமி தலைமை வகித்தார். கோட்டாட்சியர் உமா மகேஸ்வரி, துணை ஆட்சியர் (பயிற்சி) சுரேஷ், முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் கோ.விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு கொடி நாள் நிதி வசூல் ஊர்வலத்தைத் தொடக்கி வைத்தார். பெரியார் சிலை, அண்ணா சிலை, காந்தி சிலை, தேரடி தெரு, திருவூடல் தெரு வழியாக ஓயா மடம் வரை ஊர்வலம் சென்றது.
இதில், அரசு அலுவலர்கள், முன்னாள் படை வீரர்கள், பள்ளி மாணவ, மாணவிகள், என்சிசி, ஊர்க்காவல் படையினர், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி முன்னாள் படை வீரர்களுக்காக ரூ.500 நிதி வழங்கி ஊர்வலத்தை தொடக்கி வைத்தார்.
கீழ்பென்னாத்தூரில்...: கீழ்பென்னாத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் இருந்து புறப்பட்ட கொடி நாள் நிதி வசூல் ஊர்வலத்தை வட்டாட்சியர் சுகுணா தொடக்கி வைத்தார்.
இதில், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் சீத்தாராமன், மண்டல துணை வட்டாட்சியர் முருகன், தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் பரிமளா, வருவாய் ஆய்வாளர்கள் சரவணன், பர்வீன்பானு, கிராம நிர்வாக அலுவலர்கள் சிவக்குமார், பிரபாகரன் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு நிதி வசூல் செய்தனர்.
செங்கத்தில்...: செங்கத்தில் நடைபெற்ற கொடி நாள் நிதி வசூல் ஊர்வலத்தை வட்டாட்சியர் உதயகுமார் தொடக்கிவைத்தார். இதில், வருவாய் ஆய்வாளர் ராஜேந்திரன், கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆரணியில்...:  ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய பள்ளி மாணவர்கள் பங்கேற்ற கொடி நாள் ஊர்வலத்தை வட்டாட்சியர் சுப்பிரமணி தொடக்கிவைத்தார்.
இந்த ஊர்வலம் ஆரணி பழைய பேருந்து நிலையம், பெரியகடை வீதி, காந்தி சந்தை சாலை வழியாக சென்று மீண்டும் வட்டாட்சியர் அலுவலகத்தை அடைந்தது. வழிநெடுகிலும் கடை வியாபாரிகள் கொடி நாள் நிதியை உண்டியலில் செலுத்தினர். உடன், வருவாய்த்துறை அதிகாரிகள், பள்ளி ஆசிரியர்கள் சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com