அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து போராடியிருந்தால் தமிழகத்துக்கான உரிமைகளை பெற்றிருக்கலாம்: அன்புமணி ராமதாஸ் பேச்சு

நீட் தேர்வு, காவிரி பிரச்னைகளில் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து போராடியிருந்தால் தமிழகத்துக்கான உரிமைகளை பெற்றிருக்க முடியும் என்று பாமக இளைஞரணித் தலைவர்அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

நீட் தேர்வு, காவிரி பிரச்னைகளில் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து போராடியிருந்தால் தமிழகத்துக்கான உரிமைகளை பெற்றிருக்க முடியும் என்று பாமக இளைஞரணித் தலைவர்அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
செய்யாறு தொகுதி பாமக சார்பில், தமிழகத்தில் 3,321 மதுக் கடைகளை மூட போராடிய  மருத்துவர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் எம்.பி. ஆகியோருக்கான பாராட்டு விழா சனிக்கிழமை இரவு செய்யாறு - ஆரணி கூட்டுச்சாலையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு முன்னாள் எம்எல்ஏ கணேஷ்குமார் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் ஜி.கே.மணி,  மாநில துணைத் தலைவர் மு.துரை, மாநில பிரசாரக் குழுத் தலைவர் கோ.எதிரொலி மணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் பாமக இளைஞரணி மாநிலத் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:
தமிழகத்தில் எந்தக் கட்சியிலும் இல்லாத அளவுக்கு அதிக இளைஞர்களைக் கொண்ட ஒரே கட்சியாக பாமக  இருந்து வருகிறது. பொற்கால ஆட்சி அளித்த காமராஜருக்குப் பிறகு, சுமார் 50 ஆண்டுளாக தமிழகத்துக்கு இருண்ட காலமாக இருந்து வருகிறது.  மீண்டும் பொற்கால ஆட்சி அமைத்திட  பாமகவால் மட்டும் தான் முடியும்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்துக் கட்சி தலைவர்களுக்கும் சவால் விடுகிறேன். ஒரே மேடையில் நீர் மேலாண்மை உள்ளிட்டவை பற்றி நேரடியாக விவாதிக்க  முடியுமா.
திமுக, அதிமுகவுக்கு தமிழக மக்களை பற்றி கவலையில்லை. பாமக மட்டும் தான் மக்களைப் பற்றியும், விவசாயிகளைப் பற்றியும் கவலைப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக விவசாயத்துக்கு தனி பட்ஜெட் போட்டு வருகிறோம்.
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான 8 சதவீத ஒட்டு தமிழகத்தில் உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒட்டு மொத்தமாக சேர்ந்து அழுத்தம் கொடுத்திருந்தால், நீட் தேர்வு, காவிரிப் பிரச்னை உள்ளிட்ட விவகாரங்களில் தமிழகத்துக்கான உரிமைகளை பெற்றிருக்க முடியும்.
 29 ஆண்டுகள்  சுயமரியாதையுடனும், சமூக நீதியுடன் இருந்து வரும் பாமகவுக்கு பொதுமக்கள் ஆதரவு  தாருங்கள்.  ஊழலற்ற,  மது இல்லாத  நல்லாட்சியை  தருவோம் என்றார்.
கூட்டத்தில், மாநில துணைத் தலைவர் காத்தவாரயன், மாநில செயற்குழு உறுப்பினர் மண்ணப்பன், மாவட்டச் செயலர்கள் க.சீனுவாசன்,  வேலாயுதம்,  மாவட்டத் தலைவர் நடராஜன், மாநில இளைஞரணி துணைச் செயலர் கா.சீனுவாசன், மாநில மகளிரணிச் செயலர் ரேவதி சிவராஜ் உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com