அப்துல் கலாம் நினைவு தினம்: திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று மௌன ஊர்வலம்

முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் 2-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, வியாழக்கிழமை (ஜூலை 26) திருவண்ணாமலை

முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் 2-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, வியாழக்கிழமை (ஜூலை 26) திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மௌனஅஞ்சலி ஊர்வலங்கள், கருத்தரங்கம், பள்ளி மாணவ, மாணவிகளிடையே பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
திருவண்ணாமலையில்...: தினமணி நாளிதழும்,  திருவண்ணாமலை-மணலூர்பேட்டை சாலை, கீழ்அணைக்கரையில் உள்ள எஸ்.முருகையன் நினைவு முன்மாதிரி மழலையர், தொடக்க மற்றும் மேல்நிலைப் பள்ளியும் இணைந்து பள்ளி மாணவ-மாணவிகளிடையே காலை 11 மணிக்கு பல்வேறு போட்டிகளை நடத்துகின்றன.
நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைவர் சீனி.கார்த்திகேயன் தலைமை வகிக்கிறார். தாளாளர் அறிவிழி கார்த்திகேயன், நிர்வாக இயக்குநர் என்.காயத்ரி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். தலைமை ஆசிரியர் ஏ.ஆனந்தன் வரவேற்கிறார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு போட்டிகளைத் தொடங்கி வைக்கின்றனர்.
3-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளிடையே பேச்சு, கட்டுரை, ஓவியம், கவிதை, கையெழுத்துப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
 மாணவர்களின் கனவு நாயகன் என்ற தலைப்பில் நடைபெறும் இந்தப் போட்டியில் 400-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொள்கின்றனர்.
இதேபோல, திருவண்ணாமலை விஷன் பாரா மெடிக்கல் கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொள்ளும் மௌன அஞ்சலி ஊர்வலம் நடைபெறுகிறது.
திருவண்ணாமலை-வேலூர் சாலையில் உள்ள அண்ணா நுழைவு வாயிலில் இருந்து புறப்படும் பேரணியை கோட்டாட்சியர் உமா மகேஸ்வரி,  திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் (பொறுப்பு) ஷகில் அகமது ஆகியோர் தொடக்கி வைக்கின்றனர்.
இதில், மருத்துவமனை கண்காணிப்பாளர் குப்புராஜ், விஷன் பாராமெடிக்கல் கல்லூரித் தாளாளர் ரேணுகோபால், மக்கள் தொடர்பு அலுவலர் பிரபாகரன், மனிதவள மேம்பாட்டு அலுவலர் மதன்குமார், முதல்வர் அன்னலட்சுமி உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
அறிவொளிப் பூங்கா, மத்திய பேருந்து நிலையம், ரவுண்டானா, மத்தலாங்குளத் தெரு, ரவுண்டானா வழியாகச் சென்று பெரியார் சிலை பகுதியில் பேரணி முடிவடைகிறது.
தேவிகாபுரத்தில்...: தினமணி நாளிதழும், தேவிகாபுரம் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியும் இணைந்து மௌன அஞ்சலி ஊர்வலத்தை நடத்துகிறது. தேவிகாபுரம் பள்ளி வளாகத்தில் இருந்து புறப்படும் ஊர்வலம் போளூர்-சேத்துப்பட்டு சாலை, பஜார் வீதி, புதிய தெரு, வடக்கு மாட வீதி உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகளில் செல்கிறது.
போளூர் டிஎஸ்பி கோட்டீஸ்வரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தொடக்கி வைக்கிறார். பள்ளித் தலைமை ஆசிரியர் சரவணன், லயன்ஸ் சங்க நிர்வாகிகள், ஊர் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.
செய்யாறில்...: செய்யாறில் தினமணி நாளிதழும், அறிஞர் அண்ணாமலை அரசு கலை, அறிவியல் கல்லூரியின் நாட்டு  நலப்பணித் திட்டமும் இணைந்து மௌன அஞ்சலி ஊர்வலத்தை நடத்துகிறது.
ஊர்வலத்தை கோட்டாட்சியர் கிருபானந்தம் தொடக்கி வைக்கிறார். வட்டாட்சியர் ஜெயராமச்சந்திரன், கல்லூரி முதல்வர் ஆ.மூர்த்தி, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் மாரிமுத்து மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொள்கின்றனர்.
செங்கத்தில்...: செங்கத்தில் தினமணி நாளிதழும், மேல்வணக்கம்பாடி அரசு நடுநிலைப் பள்ளியும் இணைந்து மௌன அஞ்சலி ஊர்வலத்தை நடத்துகிறது.
நல்லாசிரியர் விருது பெற்ற பள்ளித் தலைமை ஆசிரியர் அன்பழகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஊர்வலத்தை தொடக்கி வைக்கிறார்.
ஆரணியில்....:  ஆரணி நகரம், ஆரணிப்பாளையம் நகராட்சி  தொடக்கப் பள்ளி,  தினமணி நாளிதழ் இணைந்து மௌன ஊர்வலத்தை நடத்துகின்றன.
மேலும், உறுதி மொழி ஏற்று அப்துல்கலாமின் பொன்மொழிகள் குறித்து பேச உள்ளனர்.  ஊர்வலத்தை ஆரணி நகர காவல் ஆய்வாளர் (பொறுப்பு) சாலமன்ராஜா தொடக்கிவைக்க உள்ளார்.
பள்ளித் தலைமையாசிரியர் பத்மாவதி, உதவி ஆசிரியர்கள் விஜயா, புவனேஸ்வரி உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com