திருவண்ணாமலையில் அரசு அருங்காட்சியகம் அமைக்கக் கோரிக்கை

திருவண்ணாமலையில் அரசு அருங்காட்சியகம் அமைக்க தமிழக அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருவண்ணாமலை எம்எல்ஏ எ.வ.வேலு கோரிக்கை விடுத்தார்.

திருவண்ணாமலையில் அரசு அருங்காட்சியகம் அமைக்க தமிழக அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருவண்ணாமலை எம்எல்ஏ எ.வ.வேலு கோரிக்கை விடுத்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: திருவண்ணாமலை மாவட்டம் தொல் பழங்காலம் முதல் தற்காலம் வரையிலான பல வரலாற்றுத் தொன்மங்களை தனக்குள்ளே கொண்டிருக்கிறது. மாவட்டத்தின் தென் எல்லையில் தென்பெண்ணையாறு ஓடும் பகுதிகள் அனைத்தும் தொன்மையானப் பதிவுகளைக் கொண்டவை.
தென்பெண்னை ஆற்றை ஒட்டியுள்ள சின்னியம்பேட்டையில் உள்ள சிற்பக்குளம், போந்தை என்ற பெயரையுடைய பழமையான ஊர், தா.மோட்டூரில் உள்ள தாய் தெய்வச் சிற்பம், வீரணம், பெருங்குளத்தூர் கிராமங்களில் உள்ள முதுமக்கள் தாழிகள், தொண்டைமானுர் வாலியர் வீடு, எடத்தனூரில் உள்ள நடுகல் மற்றும் தண்டராம்பட்டு, சாத்தனூர், ராதாபுரம், சே.கூடலூர், சிறுப்பாக்கம், கோளாப்பாடி, திருவண்ணாமலை, கோசாலை, ஆடையூர், கலசப்பாக்கம், போளூர், ஆரணி, படைவீடு, வந்தவாசி, செய்யாறு, கீழ்பென்னாத்தூர், வேட்டவலம் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட நடுகற்கள் உள்ளன.
மேலும், பல்லவர்கள் காலம் முதல் நாயக்கர் காலம் வரையிலான வரலாற்றுப் பதிவுகள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் சிற்பங்களாக, ஓவியங்களாக, கற்றளிகளாக, குளங்களாகக் காணப்படுகின்றன.
பௌத்த, சமண, சைவ, வைணவ, இஸ்லாமிய, கிறித்தவ சமயங்களைச் சேர்ந்த ஆலயங்கள், அரண்மனைக் கட்டுமானப் பணிகள் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் காணப்படுகின்றன.
ஜவ்வாதுமலை, அதையொட்டிய பல பகுதிகள், படைவீடு (படவேடு) ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்றுப் பகுதிகளைக் கொண்டுள்ளன. இந்த வரலாற்றுத் தொன்மையான அடையாளங்களில் சில மட்டுமே இந்திய, தமிழக தொல்லியல் துறைகளால் பாதுகாக்கப்படுகின்றன. பல தொன்மையான அடையாளங்கள், திருவண்ணாமலை மாவட்ட நடுகல் சிற்பங்கள் கவனிப்பின்றி, பாதுகாப்பின்றி அழிக்கப்படுகின்றன.
திருவண்ணாமலைக்கு மாதந்தோறும் பல லட்சம் பக்தர்கள் வருகின்றனர். இங்குள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு வரலாற்று அடையாளங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.
இந்த தொன்மையான அடையாளங்களைப் பாதுகாக்கவும், அந்த அடையாளங்களின் வரலாற்றுச் சிறப்புகளை எதிர்காலத் தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையிலும் திருவண்ணாமலை மாவட்டத் தலைநகரில் அரசு அருங்காட்சியத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com