திருவண்ணாமலை, செய்யாறு கல்வி மாவட்டங்களில் அரசுப் பள்ளிகளில் திருத்தப்பட்ட விடைத் தாள்கள் கூர்ந்தாய்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் திருத்தப்பட்ட 6 முதல் 9-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 விடைத் தாள்களைக் கூர்ந்தாய்வு செய்யும் பணி கடந்த 15-ஆம் தேதி தொடங்கியது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் திருத்தப்பட்ட 6 முதல் 9-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 விடைத் தாள்களைக் கூர்ந்தாய்வு செய்யும் பணி கடந்த 15-ஆம் தேதி தொடங்கியது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகளவில் கிராமங்கள் உள்ளன. இங்கு அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளில் ஏழை, எளிய, கிராமப்புற குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். பிளஸ் 2 மற்றும் 10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் தேர்ச்சி சதவீத வரிசையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை திருவண்ணாமலை மாவட்டம் கடைசி இடத்தையே பெற்று வந்தது. இந்த மாவட்டம் தேர்ச்சி சதவீதத்தில் முன்னேற்றமடைய முதன்மைக் கல்வி அலுவலர்கள் பலர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
தற்போது கல்வித் துறையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே நேரடியாகக் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். ஆட்சியரின் உத்திரவின் பேரில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயகுமார், தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து ஆலோசனை வழங்குவது, தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகள் வழங்குவது, ஆசிரியர்களுக்கு பாட வாரியாக ஆய்வுக் கூட்டத்தை நடத்தி, தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.
மேலும், தொடக்கக் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவதுடன், மாணவர்களின் அடிப்படை எழுதுதல், வாசித்தல் திறனை வளர்த்திட வேண்டும் என தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலகம் மூலம் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க அடிப்படையிலிருந்தே அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், அனைத்து வகுப்பிலும் அடிப்படை திறனின்றி எந்த மாணவரும் இருக்கக் கூடாது எனவும் ஆசிரியர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
போட்டித் தேர்வுகள்: தற்போதைய சூழலில் "நீட்' உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள அனைத்துப் பாடங்களிலும் மாணவர்கள் முழு திறன் பெற்றிருக்க வேண்டும். ஆனால், பெரும்பாலான பள்ளிகளில் பிளஸ் 1 பாடத்துக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. எனினும், போட்டித் தேர்வுகளில் 50 சதவீத கேள்விகள் பிளஸ் 1 பாடத்தில் இருந்துதான் கேட்கப்படுகின்றன என கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், பிளஸ் 1 மற்றும் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பள்ளியில் தேர்வு நடத்தப்பட்டு, திருத்தி, மாணவர்களின் தேர்ச்சி முடிவுகளை வெளியிட தயாராக வைத்திருந்த விடைத் தாள்கள் மற்றும் மதிப்பெண் பட்டியலை மறு ஆய்வு செய்திட முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார் உத்தரவிட்டார்.
அதன்படி, மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை, செய்யாறு ஆகிய 2 கல்வி மாவட்டங்களிலும் ஒரு தாலுகாவுக்கு ஒரு அரசுப் பள்ளி மையமாகத் தேர்வு செய்யப்பட்டு, அந்த மையத்தில் ஒவ்வோர் பாடத்துக்கும் ஒரு தலைமை ஆசிரியர் தலைமையில், பட்டதாரி ஆசிரியர்களை உள்ளடக்கிய ஆசிரியர் குழு நியமிக்கப்பட்டு, கூர்ந்தாய்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது.
இதேபோல, ஒவ்வோர் பாடத்துக்கும் ஆசிரியர் குழுவினர் நியமிக்கப்பட்டனர். இந்த ஆசிரியர் குழுவினர், அனைத்து விடைத் தாள்களிலும் கொடுக்கப்பட்டுள்ள மதிப்பெண்கள் சரியாக உள்ளதா, சரியான முறையில் திருத்தப்பட்டுள்ளதா, கேள்விக்கு ஏற்றவாறு பதில் அளிக்கப்பட்டு உள்ளதா, பதிலுக்கு ஏற்றவாறு மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளதா என்று கூர்ந்தாய்வு செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com