11 வட்டங்களிலும் ஜமாபந்தி தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டத்தின் 11 வட்டங்களிலும் வெள்ளிக்கிழமை ஜமாபந்தி தொடங்கியது.

திருவண்ணாமலை மாவட்டத்தின் 11 வட்டங்களிலும் வெள்ளிக்கிழமை ஜமாபந்தி தொடங்கியது.
ஆண்டு தோறும் வருவாய்த் தீர்வாயக் கணக்குகளை சரிபார்க்கும் வகையிலான ஜமாபந்தி திருவண்ணாமலை மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான (1426-ம் பசலி) ஜமாபந்தி வெள்ளிக்கிழமை மாவட்டத்தின் 11 வட்டங்களிலும் தொடங்கியது.
வந்தவாசியில்....: வந்தவாசி வட்டாட்சியர் அலுலவகத்தில் ஜமாபந்தி தொடங்கியது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே தலைமை வகித்ததுடன், மழையூர் உள்வட்டத்துக்கு உள்பட்ட மழையூர், கோதண்டபுரம், சிங்கம்பூண்டி, கடம்பை, தென்கரை, ஊர்குடி, தக்கண்டராயபுரம், கீழ்புத்தூர், பொன்னூர், திரக்கோயில், கண்டவரெட்டி, கீழ்வெள்ளியூர், கூத்தம்பட்டு, வடவணக்கம்பாடி, மேல்பாதி, நல்லேரி, சோரப்புத்தூர், ஜப்திகாரணி, சிவனம், கூனம்பாடி, பாப்பநல்லூர் ஆகிய கிராம கணக்குகளை அவர் தணிக்கை செய்தார். மேலும், அந்தக் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை அவர் பெற்றார்.
வந்தவாசி வட்டாட்சியர்கள் எஸ்.முருகன், கே.ஆர்.நரேந்திரன், மண்டல துணை வட்டாட்சியர்கள் எஸ்.திருமலை, மூர்த்தி, தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருவண்ணாமலையில்...: திருவண்ணாமலை வட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ப.சுப்பிரமணியன் தலைமையில் ஜமாபந்தி தொடங்கியது. முதல் நாளில் நாயுடுமங்கலம் உள்வட்டத்துக்கு உள்பட்ட மேப்பத்துறை, நார்த்தாம்பூண்டி, நெல்லிமேடு, சி.ஆண்டாப்பட்டு, பெரியகிளாம்பாடி, முத்தரசம்பூண்டி, கார்கோணம், கோவூர், கமலப்புத்தூர், வடபுழுதியூர், மருத்துவாம்பாடி, அகரம் சிப்பந்தி, நாயுடுமங்கலம், பொற்குணம், வெளுகனந்தல், சாலையனூர், தேவனாம்பட்டு, ஊதிரம்பூண்டி, காட்டுபுத்தூர் உள்ளிட்ட கிராமங்களுக்கான வருவாய் தீர்வாய கணக்குகள் சரிபார்க்கப்பட்டன.
பொதுமக்களிடம் இருந்து பல்வேறு வருவாய்த் துறை தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய 528 மனுக்கள் பெறப்பட்டன. 21 மனுக்கள் மீது விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டு, பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில், வட்டாட்சியர் ஆர்.ரவி, சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் டி.ரமேஷ்குமார், தலைமை நில அளவர் ஆர்.வரதராஜன் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். திங்கள்கிழமை திருவண்ணாமலை வடக்கு உள்பட்டத்துக்கு உள்பட்ட கிராமங்களுக்கான வருவாய் தீர்வாய கணக்குகள் சரிபார்க்கப்படுகின்றன.
செங்கத்தில்...: செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி தொடங்கியது. இதில், மேல்பள்ளிப்பட்டு பிர்காவுக்கு உள்பட்ட பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் கலந்து கொண்டு, வீட்டுமனைப் பட்டா மாறுதல், நிலப்பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்தனர். தகுதிவாய்ந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
வட்டாட்சியர் உதயகுமார், சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் ரேணுகா, வருவாய் ஆய்வாளர்கள் துரைராஜ், பாலமுருகன், கிராம நிர்வாக அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, விஜயகுமார் உள்பட வருவாய்த் துறையினர் பலர் கலந்து கொண்டனர்.
செய்யாறில்...: செய்யாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி தொடங்கியது. இதில், தேத்துறை உள்வட்டம், கீழ்நேத்தப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த வருவாய் தீர்ப்பாய கணக்குகளை ஜமாபந்தி அலுவலர் ஜோதி ஆய்வு செய்தார். முதல் நாளில் 225 மனுக்கள் பெறப்பட்டன. வட்டாட்சியர் ஜெயராமச்சந்திரன், மண்டல துணை வட்டாட்சியர் முரளி, முதல் நிலை வட்டாட்சியர் அரி மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போளூரில்...: போளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி தொடங்கியது. மாவட்ட வருவாய் அலுவலர் சா.பழனி தலைமை வகித்து, போளூர் பிர்காவுக்கு உள்பட்ட போளூர், மாம்பட்டு, திருசூர், வசூர் உள்பட 21 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், கிராம மக்கள் அளித்த 426 மனுக்களைப் பெற்றார். பின்னர், 14 பேருக்கு நலத் திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.
வட்டாட்சியர் புவனேஸ்வரி, வட்ட வழங்கல் அலுவலர் தேவேந்திரன், வருவாய் ஆய்வாளர் கோபால், கிராம நிர்வாக அலுவலர் இருளப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மற்ற வட்டங்களில்...: இதேபோல, ஆரணி வட்டத்தில் செய்யாறு சார் - ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையிலும், கீழ்பென்னாத்தூர் வட்டத்தில் திருவண்ணாமலை கோட்டாட்சியர் உமா மகேஸ்வரி தலைமையிலும், தண்டராம்பட்டு வட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தண்டாயுதபாணி தலைமையிலும் ஜமாபந்தி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com