வெம்பாக்கம், தண்டராம்பட்டு வட்டங்களில் ஜமாபந்தி நிறைவு

வெம்பாக்கம், தண்டராம்பட்டு வட்டங்களில் நடைபெற்று வந்த ஜமாபந்தி நிறைவடைந்தது.

வெம்பாக்கம், தண்டராம்பட்டு வட்டங்களில் நடைபெற்று வந்த ஜமாபந்தி நிறைவடைந்தது.
ஜமாபந்தி எனப்படும் வருவாய்த் தீர்வாயக் கணக்குத் தணிக்கை வெம்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் திருவண்ணாமலை மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் கே.சாவித்திரி தலைமையில் நடைபெற்று வந்தது.
இதில் வெம்பாக்கம், தூசி, நாட்டேரி, பெருங்கட்டூர் ஆகிய உள் வட்டங்களில் உள்ள கிராமங்களின் வருவாய் தீர்வாயக் கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டன. தொடர்ந்து, 6 நாள்களாக நடைபெற்ற ஜமாபந்தியின்போது மொத்தம் 719 மனுக்கள் பெறப்பட்டன. இவற்றில் 79 மனுக்கள் மீது உடனடித் தீர்வு காணப்பட்டு சான்று வழங்கப்பட்டது. 16 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மீதமுள்ள 624 மனுக்கள் மீது விசாரணை மேற்கெள்ளப்பட்டு வந்தது.
இந்நிலையில், ஜமாபந்தியின் நிறைவு நாளான வியாழக்கிழமை மாலை விவசாய மாநாடு நிகழ்ச்சியாக நடந்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வழங்கல் அலுவலர் கே.சாவித்திரி தலைமை வகித்தார். வட்டாட்சியர் க.பெருமாள் வரவேற்றார். சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் அற்புதம், மண்டல துணை வட்டாட்சியர் ஜெயவேல், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுந்தரம், ரெங்கசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற செய்யாறு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் தூசி கே.மோகன், 11 பேருக்கு பட்டா மாற்றம், 12 பேருக்கு உட்பிரிவு மாற்றம், 2 பேருக்கு வீட்டுமனைப் பட்டா, 320 விவசாயிகளுக்கு சிறு, குறு விவசாயி சான்று, 7 பேருக்கு வாரிசுச் சான்று, 86 பேருக்கு இருளர் ஜாதிச்சான்று என மொத்தம் 439 பேருக்கு சான்றிதழ்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.
மீதமுள்ள 201 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, வரும் ஜூன் 30-ஆம் தேதிக்குள் நலத் திட்ட உதவிகள் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்ட இணைச் செயலர் குமார், கட்சி சார்பற்ற விவசாய சங்கப் பிரதிநிதி வாக்கடை புருஷோத்தமன் மற்றும் சுகாதாரம், வேளாண், தோட்டக்கலை, சமூக நலத்துறை, கால்நடை ஆகிய துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தண்டராம்பட்டு: தண்டராம்பட்டு வட்டத்துக்கு உள்பட்ட தண்டராம்பட்டு, தானிப்பாடி, வானாபுரம் உள் வட்டங்களுக்கான ஜமாபந்தி கடந்த
19-ஆம் தேதி தொடங்கியது. இதன் நிறைவு விழா புதன்கிழமை மாலை நடைபெற்றது.
விழாவுக்கு, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தண்டாயுதபாணி தலைமை வகித்தார். வட்டாட்சியர் சஜேஷ்பாபு வரவேற்றார். ஜமாபந்தியில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 1,836 மனுக்கள் பெறப்பட்டன. இவற்றில், 216 மனுக்கள் மீது விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டு, பல்வேறு நலத் திட்ட உதவிகளை ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தண்டாயுதபாணி வழங்கினார்.
மீதமுள்ள 1,620 மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன. இதில், மண்டல துணை வட்டாட்சியர் கனகராஜ், தலைமை நில அளவர் இளையராஜா மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய்த் துறையினர் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com