தீபத் திருவிழாவின் போது மலையேற விதிக்கப்பட்ட தடையை நீக்காவிட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கை: எ.வ.வேலு

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மலையேற விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்காவிட்டால், சட்டப்பூர்வ

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மலையேற விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்காவிட்டால், சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக முன்னாள் அமைச்சரும், மாவட்ட திமுக செயலருமான எ.வ.வேலு தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை அவர் கூறியதாவது: கார்த்திகை தீப வழிபாட்டில் தமிழகத்திலேயே திருவண்ணாமலைக்குத்தான் தனிச்சிறப்பு உள்ளது. இந்தச் சிறப்பை இழக்கச் செய்யும் வகையில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவு உள்ளது.
மலையேறுவதால் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. கூட்ட நெரிசலில் தக்க பாதுகாப்பு அளிக்க முடியவில்லை. பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு மற்றும் மருத்துவ சிகிச்சை செய்வதில் சிக்கல் இருக்கிறது. எனவே, இந்த தீபத்தின் போது மலையேறத் தடை விதிக்கப்படுகிறது. மலை ஏறுவதற்கான 9 பாதைகளும் மூடப்படும் என்று ஆட்சியர் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
மலையேறுவதைத் தடுக்க அரசுக்கு தார்மீக உரிமை இல்லை. பக்தர்கள் பெரும்பாலும் தங்களது வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்ள மலையேறுவது என்பது பன்னெடு காலமாக நடைபெறுகிறது.
பேரிடர் நிறைந்த மலைப் பகுதியான அமர்நாத் பனி லிங்கத்தை காணச் செல்லும் பக்தர்களுக்கு அரசின் மூன்றடுக்குப் பாதுகாப்பு உள்ளது. சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களுக்கு கேரள அரசு தக்க பாதுகாப்பும், சிறப்பு வசதிகளையும் செய்து தருகிறது.
தடை செய்யப்பட்ட தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள கண்ணகி கோயிலுக்கு ஆண்டுக்கு ஒருமுறை இரு மாநில பக்தர்களும் சென்று வர இரு மாநில அரசுகளும் ஏற்பாடு செய்கிறது. அதுபோல, தீபத் திருவிழாவின் போது மலையேறும் பக்தர்களுக்குத் தேவையான பாதுகாப்பு, மருத்துவ வசதிகளை அரசு செய்து தர வேண்டும். உடனே, ஆட்சியர் விதித்துள்ள தடையை விலக்க வேண்டும். தடையை நீக்காவிட்டால், திமுக சார்பில் உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் எ.வ.வேலு.
மாவட்ட திமுக துணைச் செயலர் சாவல்பூண்டி மா.சுந்தரேசன், செங்கம் எம்.எல்.ஏ. மு.பெ.கிரி, நகரச் செயலர் ப.கார்த்திவேல்மாறன், மாவட்ட அமைப்பாளர்கள் சி.என்.அண்ணாதுரை, சேஷா.திருவேங்கடம், ஒன்றியச் செயலர்கள் த.ரமணன், சி.மாரிமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com