யானை அட்டகாசம்: ஜவ்வாது மலையில் 100 ஏக்கர் பயிர் நாசம்

திருப்பத்தூரை அடுத்த ஜவ்வாதுமலை பகுதியில் ஒற்றை யானை செய்த அட்டகாசத்தால் சுமார் 100 ஏக்கர் பயிர்கள் நாசமாயின.

திருப்பத்தூரை அடுத்த ஜவ்வாதுமலை பகுதியில் ஒற்றை யானை செய்த அட்டகாசத்தால் சுமார் 100 ஏக்கர் பயிர்கள் நாசமாயின.
வேலூர் மாவட்டம், திருப்பத்தூரை அடுத்த ஜவ்வாதுமலை பகுதியில் புதூர் நாடு, புங்கம்பட்டு நாடு, நெல்லிவாசல் நாடு ஆகிய 3 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் உள்ள 32 கிராமங்களில் 50ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். மலைக் கிராமத்தில் விவசாயிகள் சாமை, திணை, நெல், வாழை, கொய்யா உள்ளிட்டவற்றைப் பயிரிட்டு வருகின்றனர்.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் அட்டகாசம் செய்து வந்த 7 காட்டு யானைகளை வனத் துறையினர் கிராம மக்களின் உதவியுடன் பிடித்து, முதுமலை காப்பகத்தில் ஒப்படைத்தனர். வயது முதிர்வான ஒரு யானை மட்டும் இதே காட்டுப் பகுதியில் சுற்றி வருகிறது.
 கடந்த 2 நாள்களாக ஜவ்வாது மலைப்பகுதியான புங்கம்பட்டு நாடு உள்பட 6 ஊராட்சிகளுக்கு உள்பட்ட தகரகுப்பம், கொத்தனூர், வசந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இந்த ஒற்றை யானை அட்டகாசம் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு கொத்தனூர் பகுதியில் உள்ள காளி என்பவரின் வீட்டை இந்த யானை இடித்துத் தள்ளியது. மேலும் அப்பகுதியில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட வாழை, நெல், சாமை உள்ளிட்ட பயிர்களை மிதித்து சேதப்படுத்தியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், நிகழ்விடத்துக்கு வந்த வனச் சரக அலுவலர் பரமசிவன் தலைமையிலான வனத் துறையினர், கிராம மக்களின் உதவியுடன் பட்டாசு வெடித்தும், மேளம் அடித்தும் அந்த ஒற்றை யானையைக் காட்டுக்குள் விரட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com