அருணாசலேஸ்வரர் கோயிலில் அஷ்டபந்தனம் பெயர்ந்த விவகாரம்: அகில இந்திய இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் அஷ்டபந்தன மருந்து பெயர்ந்தது தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிடக் கோரி

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் அஷ்டபந்தன மருந்து பெயர்ந்தது தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, திருவண்ணாமலையில் அகில இந்திய இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை, அண்ணா சிலை எதிரே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அகில இந்திய இந்து மக்கள் கட்சியின் தேசிய அமைப்பாளர் வராகி சுந்தர் சுவாமிகள் தலைமை வகித்தார்.
மகளிரணி மாவட்டத் தலைவி சித்ரா, நகரச் செயலர் ஆடிட்டர் கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊடகப் பிரிவு செயலர் ஆர்.தங்கராஜ் வரவேற்றார்.
கட்சியின் நிறுவனர் தலைவர் செஞ்சி ராஜா சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். ஆர்ப்பாட்டத்தில், திருவண்ணாமலை இந்திரலிங்கம் அருகே உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அந்த இடத்தை அரசு கையகப்படுத்த வேண்டும்.
கார்த்திகை தீபத் திருவிழாவைக் காண தமிழகம் முழுவதும் இருந்து திருவண்ணாமலைக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் கட்டணமில்லா இலவசப் பேருந்துகள் இயக்க வேண்டும்.
அருணாசலேஸ்வரர் கோயிலில் தீபத் திருநாளன்று சிறப்பு தரிசனக் கட்டணம், விஐபி தரிசனம் ஆகியவற்றை ரத்து செய்து பக்தர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
அருணாசலேஸ்வரர் பிரம்மபாகத்தில் இருந்த அஷ்டபந்தன மருந்து பெயர்ந்தது தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் ஆன்மிகப் பேரவை மாநிலத் தலைவர் தேவபுரி கண்ணப்ப சுவாமிகள், மாநிலச் செயலர் சிவபார்த்தீப சுவாமிகள், நகரத் தலைவர் ராமு உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com