பெண் மர்மச் சாவில் 24 மணி நேரத்தில் கொலையாளி கைது: செங்கம் போலீஸாருக்கு எஸ்.பி. பாராட்டு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே பெண் மர்மச் சாவில் 24 மணி நேரத்தில் கொலையாளியை  கைது செய்த செங்கம் போலீஸாருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பொன்னி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே பெண் மர்மச் சாவில் 24 மணி நேரத்தில் கொலையாளியை  கைது செய்த செங்கம் போலீஸாருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பொன்னி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
செங்கத்தை அடுத்த விண்ணவனூர் கிராமத்தைச் சேர்ந்த ரவி மகள் சங்கீதா புதன்கிழமை அந்தக் கிராமத்தில் உள்ள ஓடைப் பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.  இதுகுறித்து தகவலறிந்த பாய்ச்சல் போலீஸார் சங்கீதாவின் சடலத்தை மீட்டு, உடல்கூறு சோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, இந்தக் கொலை தொடர்பாக விசாரிக்க செங்கம் காவல் துணைக் கண்காணிப்பாளர் சுந்தரமூர்த்தி தலைமையில், ஆய்வாளர்கள் (செங்கம்) கர்ணன், (மேல்செங்கம்) பூபதி, உதவி ஆய்வாளர்கள் முரளி,  முத்துகுமாரசாமி ஆகியோரைக் கொண்ட தனிப்படையை அமைத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பொன்னி உத்தரவிட்டார்.
இந்நிலையில், வியாழக்கிழமை காலை அம்மாபாளையம் பகுதியில் பேருந்துக்காக நின்றிருந்த இளைஞரை பிடித்து தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, அந்த இளைஞர் முன்னுக்குப்பின் முரணாக
பதிலளித்ததால், காவல் நிலையம் அழைத்துச் சென்று அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரைச் சேர்ந்தவர் மாயவன் மகன் பிரபு (31). சங்கீதா கர்நாடக மாநிலம், பெங்களூரில் பூண்டு மண்டியில் வேலை செய்தபோது அவருக்கும், பிரபுவுக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சங்கீதாவின் கணவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதால், அவர் தனது கணவரை விட்டு பிரிந்து பிரபுவுடன் கடந்த 4 ஆண்டுகளாக வாழ்ந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன் அவரது தாய் வீட்டுக்கு வந்த சங்கீதா மீண்டும் பெங்களூரு செல்லாமல் விண்ணவனூர் கிராமத்திலேயே வசித்து வந்துள்ளார். இதனிடையே, விண்ணவனூருக்கு புதன்கிழமை வந்த பிரபு, சங்கீதாவை பெங்களூருக்கு அழைத்துள்ளார்.
அவர் வர மறுத்ததால், மாலையில் ஆசை வார்த்தை கூறி அந்தப் பகுதியில் உள்ள ஓடைக்கு அவரை அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், சங்கீதாவின் துப்பட்டாவால் அவரது கழுத்தை நெரித்தும், பிளேடுகளால் வெட்டியும் அவரை பிரபு கொலை செய்துள்ளார் என போலீஸார் கூறினர். மேலும், பாய்ச்சல் போலீஸார் பிரபு மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்நிலையில், 24 மணி நேரத்தில் கொலையாளியை கைது செய்ததற்காக செங்கம் தனிப்படை போலீஸாருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பொன்னி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com