வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை: நவம்பர் 30-க்குள் விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உதவித்தொகை பெற விரும்பும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் வரும் நவம்பர் 30-ஆம் தேதிக்குள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உதவித்தொகை பெற விரும்பும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் வரும் நவம்பர் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் படித்து, வேலையில்லாத இளைஞர்களுக்கு தமிழக அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது. அதன்படி, 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள்,
10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பட்டம் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் தங்களது கல்வித்தகுதியை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தொடர்ந்து பதிவை புதுப்பித்து வருபவர்களாக இருக்க வேண்டும். 2017 செப்டம்பர் 30-ஆம் தேதிப்படி விண்ணப்பதாரர்கள் 5 ஆண்டுகளுக்கு மேல் வேலைவாய்ப்புக்காக காத்திருப்பவராக இருக்க வேண்டும்.
மாற்றுத் திறனாளி பதிவுதாரராக இருப்பின், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடிந்திருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் வயது வரம்பு ஆதிதிராவிடர், பழங்குடியினராக இருப்பின் 45 வயதுக்கு மிகாமலும், பிற்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்பட்ட வகுப்பினர், இதர வகுப்பினர்கள் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒரு விண்ணப்பதாரருக்கு ஒருமுறை மட்டுமே நிவாரணம் வழங்கப்படும். விண்ணப்பதாரர் 10-ஆம் வகுப்பு தவறியவர்களாக இருப்பின் மாதம் ரூ.200 உதவித்தொகை வழங்கப்படும். 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருப்பின் மாதம் ரூ.300-ஆம், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400-ஆம், பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.600-ஆம் உதவித்தொகை வழங்கப்படும்.
மாற்றுத் திறனாளி விண்ணப்பதாரராக இருப்பின் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் ரூ.600-ஆம், மேல்நிலை வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.750-ஆம், பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1,000-மும் உதவித்தொகை வழங்கப்படும்.
தகுதியான விண்ணப்பதாரர்கள் திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெறப்பட்ட விண்ணப்பத்தையோ, வேலைவாய்ப்புத் துறை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தையோ, நகல் எடுத்த விண்ணப்பத்தையோ பூர்த்தி செய்து வங்கிக் கணக்குப் புத்தகத்துடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் நவம்பர் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
ஏற்கெனவே உதவித்தொகை பெறுபவர்கள் தொடர்ந்து உதவித்தொகை பெற, வேலையில் இல்லை என்பதற்கான சுயஉறுதிமொழி ஆவணத்தை நேரில் அளிக்க வேண்டும். 3 ஆண்டுகள் நிவாரணம் பெற்றவர்கள் சுய உறுதிமொழி ஆவணம் அளிக்கத் தேவையில்லை என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com