பாரதமாதாவுக்கு கோயில் கட்டாவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம்: திருவண்ணாமலையில் குமரி அனந்தன் பேட்டி

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் பாரதமாதாவுக்கு தமிழக அரசு கோயில் கட்டித்தராவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள்

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் பாரதமாதாவுக்கு தமிழக அரசு கோயில் கட்டித்தராவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் குமரி அனந்தன் கூறினார்.
பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா மீது எழுந்துள்ள முறைகேடு புகாரைக் கண்டித்து, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை அண்ணா சிலை எதிரே சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தெற்கு மாவட்டத் தலைவர் செங்கம் ஜி.குமார் தலைமை வகித்தார். நகரத் தலைவர் என்.வெற்றிச்செல்வன் வரவேற்றார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், காந்தி பேரவைத் தலைவருமான குமரி அனந்தன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினார். மேலும், பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா மீது எழுந்துள்ள முறைகேடு புகாரைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதையடுத்து, குமரி அனந்தன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகம் விவசாயிகள் நிறைந்த மாநிலம். நாட்டில் உள்ள அணைகள் மூலம் 31 சதவீத தண்ணீரை மட்டுமே விவசாயம், குடிநீர் தேவைக்குப் பயன்படுத்த முடிகிறது. மீதமுள்ள 69 சதவீத தண்ணீர் வீணாகக் கடலில் கலக்கிறது.
இந்தத் தண்ணீர் கடலில் கலக்காமல் விவசாயம், குடிநீருக்கு பயன்படுத்த வழிவகை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி நடை பயணம் மேற்கொண்டுள்ளேன். தமிழக முன்னாள் முதல்வர் காமராஜர், முன்னாள் அமைச்சர் கக்கன் ஆகியோர் மதுரை ஸ்ரீமீனாட்சியம்மன் கோயிலுக்குள் செல்ல முடியாதபடி சாதியின் அடிப்படையில் தடுத்து நிறுத்திய காலகட்டத்தில் தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் 6 ஏக்கர் நிலத்தை வாங்கி அங்கு பாரத மாதாவுக்கு கோயில் கட்ட தியாகி சுப்பிரமணிய சிவா ஏற்பாடு செய்தார்.
சாதி, மதம் என்ற பாகுபாடு இல்லாமல் இந்தக் கோயிலில் அனைத்து மதத்தினரும் சென்று வழிபாடு செய்ய சுப்பிரமணிய சிவா பெரும் முயற்சி எடுத்தார். இந்த முயற்சியை நிறைவேற்றும் வகையில் பாப்பாரப்பட்டியில் பாரதமாதாவுக்கு தமிழக அரசு கோயில் கட்டித்தர வேண்டும் என்று இந்த நடை பயணம் மூலம் வலியுறுத்தி வருகிறோம்.
கோயில் கட்ட தமிழக அரசு உத்தரவிட்டால், பாப்பாரப்பட்டியில் தமிழக அரசுக்கு நன்றி அறிவிப்புக் கூட்டம் நடத்துவோம். இல்லாவிட்டால் தனி நபராக இருந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி உயிர் துறப்பேன். தமிழக அரசு கோயில் கட்ட அனுமதி அளிக்கப்போகிறதா, என்னுடையை உயிரை எடுக்கப்போகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்றார். ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலர் பி.எஸ்.விஜயகுமார், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் செந்தமிழரசு, எம்.கே.காமராஜ், மாவட்ட துணைத் தலைவர்கள் சீனுவாசன், அண்ணாச்சி, மாவட்டப் பொருளாளர் பி.சண்முகம், புருஷோத்தமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com