திருவண்ணாமலை கிரிவலப் பாதை அகலப்படுத்தும் பணி: ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலையில் 14 கி.மீ. தொலைவுள்ள கிரிவலப் பாதை பக்தர்களின் வசதிக்காக ரூ. 65 கோடியில் அகலப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

திருவண்ணாமலையில் 14 கி.மீ. தொலைவுள்ள கிரிவலப் பாதை பக்தர்களின் வசதிக்காக ரூ. 65 கோடியில் அகலப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இந்தப் பணி குறித்து மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.
கிரிவலப் பாதையில் உள்ள அபய மண்டபம் முதல் அண்ணா நுழைவு வாயில் வரையிலான சுமார் 2.6 கி.மீ. தொலைவுக்கு அதிகாரிகளுடன் நடந்தே சென்று அவர் இந்த ஆய்வை மேற்கொண்டார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக நீதிமன்ற அனுமதியுடன் ரூ. 65 கோடியில் கிரிவலப் பாதையை அகலப்படுத்துதல் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நெடுஞ்சாலைத் துறை,  ஊரக வளர்ச்சித் துறை, நகராட்சி, வருவாய்த் துறை, வனத் துறை, காவல் துறை உள்ளிட்ட துறைகளின் அலுவலர்களுடன் இந்த ஆய்வு நடைபெற்றது.
இந்தப் பணிக்காக ஒதுக்கப்பட்ட ரூ. 65 கோடியில் ரூ. 50 கோடி நிதி வரப் பெற்றுள்ளது. அனைத்துப் பணிகளும் விரைவில் தொடங்கப்பட்டு, 6 மாதங்களில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், கிரிவலப் பாதையில் உள்ள மரங்களை வெட்டாமலும், கூடுதலாக மரக்கன்றுகளை நடவும் நடவடிக்கை எடுக்கப்படும். கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக பாதை முழுவதும் குழாய்கள் மூலம் குடிநீர் வசதி, கூடுதல் கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்படும்.
அதேபோல, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க நிலையான இடம் தேர்வு செய்யப்பட்டு, தேவையான வசதிகள் செய்து தரப்படும். சிறு வியாபாரிகளுக்கு கிரிவலப் பாதையின் ஓரமாக பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் இடம் ஒதுக்கப்படும்.  கிரிவலப் பாதையில் தேர்ந்தெடுக்கப்படும் இடங்களில் திறந்த வெளி குளியலறைகள் அமைக்கப்படும். மேலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும், மின் விளக்குகளைப் பொருத்த கம்பங்கள் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தினசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் க.லோகநாயகி, நகராட்சி ஆணையர் பாரிஜாதம், வருவாய்க் கோட்ட அலுவலர் உமா மகேஸ்வரி, நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் பி.ஜெயசேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com