சாலை அருகே கொட்டப்படும் குப்பையால் சுகாதாரச் சீர்கேடு

போளூர் - சேத்துப்பட்டு சாலையில் போளூர் பேரூராட்சியினர் குப்பைக் கழிவுகளை கொட்டி வருவதால், அந்தப் பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

போளூர் - சேத்துப்பட்டு சாலையில் போளூர் பேரூராட்சியினர் குப்பைக் கழிவுகளை கொட்டி வருவதால், அந்தப் பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
போளூர் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் தெரு வாரியாக பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மக்கும், மக்காத குப்பை என தரம் பிரித்து தனி தனியாக போடும் வகையில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், பழைய, புதிய பேருந்து நிலையம், பஜார் வீதி உள்பட முக்கிய வீதிகளிலும் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
எனினும், இந்தக் குப்பைத் தொட்டிகளில் பொதுமக்கள், வியாபாரிகள் குப்பைகளை தரம் பிரித்து போடாமல் ஒரே தொட்டியில் குப்பையைப் போடுவதால், பேரூராட்சி நிர்வாகத்தால் குப்பையை தரம் பிரிக்க முடியாத நிலை ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக பேரூராட்சி நிர்வாக ஊழியர்கள் குப்பையை வாகனத்தில் ஏற்றிச் சென்று வேலூர் - திருவண்ணாமலை சாலையில் உள்ள பேரூராட்சிக்குச் சொந்தமான குப்பைக் கிடங்கில் குப்பையைக் கொட்டாமல், போளூர் - சேத்துப்பட்டு சாலை அருகே கொட்டியுள்ளனர்.
இதனால் போளூர் - சேத்துப்பட்டு சாலையில் செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுவதுடன், அந்தப் பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. மேலும், இந்தச் சாலை அருகில் வெண்மணி ஊராட்சி பொதுமக்கள் வசிப்பதால், அவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, போளூர் - சேத்துப்பட்டு சாலையில் குப்பை கொட்டப்படுவதைத் தடுக்கவும், குப்பையைத் தரம் பிரித்து மக்கச் செய்யவும் மாவட்ட நிர்வாகம் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே போளூர் பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com