யோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில் தத்ரூப கொலு...!

திருவண்ணாமலை ஸ்ரீயோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில் ராமாயண நிகழ்வுகளை தத்ரூப காட்சிகளுடன் விளக்கும் நவராத்திரி கொலு வெள்ளிக்கிழமை தொடங்கியது.

திருவண்ணாமலை ஸ்ரீயோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில் ராமாயண நிகழ்வுகளை தத்ரூப காட்சிகளுடன் விளக்கும் நவராத்திரி கொலு வெள்ளிக்கிழமை தொடங்கியது.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதுப்புது பொம்மைகளால் அமைக்கப்பட்டுள்ள சிவனின் பிரதோஷ நடனம், பஞ்சபூத ஸ்தலங்கள், கும்பகர்ணனை துயிலில் இருந்து யானை எழுப்புதல் உள்பட பல்வேறு சுவாமிகளின் அவதாரங்கள் அடங்கிய கொலு பக்தர்களை வியக்க வைக்கின்றன.
பக்தர்களைக் கவரும் பிரதோஷ நடனம்: சிவனுக்கு உகந்த பூஜைகளில் பிரதோஷப் பூஜையும் ஒன்று. பிரதோஷ தினத்தன்று மாலை 4.30 முதல் 6 மணி வரை கோயில்களில் நடைபெறும் பூஜையின்போது, நந்தியின் இரண்டு கொம்புகளுக்கு நடுவே நின்றுகொண்டு சிவன் நடனமாடுவாராம். இந்த நிகழ்வைப் பார்க்கும் பக்தர்களின் மனக்குறைகள் நீங்கி, அவர்களது குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடைபெறும் என்பது ஐதீகம். இந்த நிகழ்வை விளக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கொலு பார்வையாளர்களை வெகுவாகக் கவர்கிறது.
அம்பாளின் பல்வேறு அவதாரங்கள்: மேலும், ஸ்ரீஅன்னபூரணி, ஸ்ரீசிம்மவாகினி, ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீலட்சுமி, ஸ்ரீதுர்காதேவி, ஸ்ரீகெஜலட்சுமி உள்பட அம்பாளின் பல்வேறு அவதாரங்களை விளக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அம்பாள் அவதார கொலுவும் இங்கு இடம்பெற்றுள்ளது.
கிருஷ்ண லீலைகள்: கிருஷ்ணரை சிறையில் இருந்து வசுதேவர் கோகுலத்துக்கு எடுத்துச் செல்லுதல், கோகுலத்தில் கிருஷ்ண ஜெயந்தி, கிருஷ்ணர் உரி அடித்து வெண்ணையைத் திருடுதல், கோவர்த்தனகிரியை தூக்கி ரட்சித்தல் ஆகிய கிருஷ்ணரின் லீலைகளை விளக்கும் கொலுவும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன.
பெருமாள் அவதாரங்கள், சிவ குடும்பம்: மேலும், ஸ்ரீராதாகிருஷ்ணர், லட்சுமி நரசிம்மர், ஸ்ரீரங்கநாதர் உள்ளிட்ட பெருமாளின் பல்வேறு அவதாரங்களை விளக்கும் கொலு, சிவன், பார்வதி, ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகர் உள்ளிட்ட சிவகுடும்பங்கள் அடங்கிய கொலுவும் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், பஞ்ச பூத ஸ்தலங்கள், ராமாயண நிகழ்வுகளை விளக்கும் கொலு, முருகனின் அறுபடை வீடுகள், நர்தரா கிராமத்தில் யோகி ராம்சுரத்குமார் பிறந்தது முதல் திருவண்ணாமலையில் பக்தர்களுக்கு அருளாசி வழங்கியது வரையிலான காட்சிகளை விளக்கும் கொலு, அமர்நாத் பனிலிங்கம், முல்லைக்குத் தேர் கொடுத்த பாரியின் கதை, சிபிசக்கரவர்த்தியின் கதை ஆகிய நீதிக்கதைகளை விளக்கும் கொலுவும் அமைக்கப்பட்டுள்ளன.
மாலை நேர பக்தி நிகழ்ச்சிகள்: தத்ரூப நவராத்திரி கொலுவுடன், தினமும் மாலை நேர பக்தி நிகழ்ச்சிகளுக்கு ஆஸ்ரமத் தலைவரும், நீதியரசருமான டி.எஸ்.அருணாச்சலம், அறங்காவலர்கள் மா.தேவகி, மதர் விஜயலட்சுமி, பி.ஏ.ஜி.குமரன், எஸ்.சுவாமிநாதன், ராஜேஸ்வரி, ஆஸ்ரம தன்னார்வலர் ஆர்.எஸ்.இந்திரஜித் ஆகியோர் ஏற்பாடு செய்துள்ளனர்.
25-ஆம் தேதி ரோபியா ரமேஷ் குழுவினரின் பரத நாட்டியம், 26-ஆம் தேதி ஸ்ரீமுரளிதர சுவாமியின் சிஷ்யை அனுஷா பாலாஜி குழுவினரின் மதுர கீதம் பக்திப் பாடல்கள் நிகழ்ச்சி, 27-ஆம் தேதி அனுஷா பாலாஜி குழுவினரின் சங்கீத உபன்யாசம், 28-ஆம் தேதி விஷால் குழுவினரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி, 29-ஆம் தேதி குப்புராஜ் பாகவதர் குழுவினரின் திவ்ய நாக கீர்த்தன நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com