விவசாய பயன்பாட்டுக்கு ஏரியில் மண் அள்ளும் பணி தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாய பயன்பாட்டுக்கு ஏரியில் மண் அள்ளும் பணியை செங்கத்தை அடுத்த காஞ்சி கிராமத்தில்

திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாய பயன்பாட்டுக்கு ஏரியில் மண் அள்ளும் பணியை செங்கத்தை அடுத்த காஞ்சி கிராமத்தில் உள்ள ஏரியில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி சனிக்கிழமை தொடக்கி வைத்தார்.
விவசாயிகள் பயன்பெறும் வகையில், நிலங்களை செம்மைப்படுத்தவும், ஏரிகள், குளங்களில் அதிகளவில் தண்ணீரை சேமிக்கும் வகையிலும், பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள், குளங்கள் மற்றும் அணைகளில் உள்ள வண்டல் மண்ணை இலவசமாக விவசாயிகளுக்கு வழங்க தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.
அதனடிப்படையில், கலசப்பாக்கம் தொகுதிக்கு உள்பட்ட காஞ்சியில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரியில் விவசாயப் பன்பாட்டுக்கு மண் அள்ளும் பணியை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தொடக்கி வைத்தார். பின்னர், ஆட்சியர் கூறியதாவது:
கிராமப்புறங்களில் பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள், குளங்கள் மற்றும் அணைகளில் விவசாயிகள் கட்டணம் ஏதும் இல்லாமல் விவசாயப் பயன்பாட்டுக்கு மண்ணை அள்ளிப் பயன்படுத்தலாம்.
அதற்கு முன்னதாக, விவசாய நிலத்தின் சிட்டா நகலுடன் தங்கள் பகுதியிலுள்ள வாட்டாட்சியர் அலுவலகத்தில் ஏரி, குளங்களில் மண் அள்ளுவது தொடர்பாக விவசாயிகள் பதிவு செய்து ஒப்புதல் பெற வேண்டும்.
தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஏரி, குளங்களுக்கு மண் அள்ள டிராக்டரை விவசாயிகள் கொண்டு சென்றால், அங்கு பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சித் துறை சார்பில், பொக்லைன் இயந்திரம் மூலம் மண் அள்ளப்பட்டு, டிராக்டரில் ஏற்றி விடப்படும்.
பொக்லைன் இயந்திரத்துக்கு கட்டணமாக ஒரு டிராக்டரில் மண் பாரம் ஏற்ற ரூ.100 மட்டும் செலுத்த வேண்டும். விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வேளாண் நிலங்களை செம்மைப்படுத்திக் கொள்ளலாம் என்றார் அவர். திருவண்ணாமலை கோட்டாட்சியர் உமாமகேஸ்வரி, செங்கம் வட்டாட்சியர் ரேணுகா, போளூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் சின்னராஜ், புதுப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தன், பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் ராஜசேகரன், உதவிச் செயற்பொறியாளர் ராஜாராம் உள்பட வருவாய்த் துறையினர், பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் 
உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com