இந்து முன்னணியினரை கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை தாக்கிய இந்து முன்னணி அமைப்பினரை கைது செய்யக் கோரி, வந்தவாசி தேரடி பகுதியில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை தாக்கிய இந்து முன்னணி அமைப்பினரை கைது செய்யக் கோரி, வந்தவாசி தேரடி பகுதியில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் கடந்த 5-ஆம் தேதி முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது.
 அப்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வந்தவாசி சன்னதி தெருவில் உள்ள அரசு வங்கிக்குப் பூட்டுப் போட்டுப் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தின் போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும், இந்து முன்னணியினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் காயமடைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டாரக் குழு உறுப்பினர் கா.யாசர்அராபத் வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட பொதுச் செயலர் டி.ஆறுமுகம், மாவட்டச் செயலர் சுரேஷ் உள்ளிட்ட 3 பேர் மீது வந்தவாசி தெற்கு போலீஸார் வழக்குப் பதிந்தனர்.
 இந்த நிலையில், இந்து முன்னணியினரை கைது செய்யக் கோரியும், சரிவர நடவடிக்கை எடுக்காத காவல் துறையை கண்டித்தும் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் வந்தவாசி தேரடியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
 ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் எம்.சிவக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட திமுக துணைச் செயலர் எம்.எஸ்.தரணிவேந்தன்
 ஆர்ப்பாட்டத்தைத் தொடக்கி வைத்தார்.
 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் என்.பாண்டி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.வீரபத்திரன், மனிதநேய மக்கள் கட்சித் தலைமைக் கழகப் பேச்சாளர் ஜெய்னுல் ஆப்தீன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலர் சாதிக், காங்கிரஸ் மாநில பொதுக் குழு உறுப்பினர் எச்.அப்துல் கலீம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொகுதிச் செயலர் மேத்தா ரமேஷ் உள்ளிட்டோர் உரையாற்றினர்.
 முன்னதாக, வந்தவாசி கோட்டை மூலையிலிருந்து தொடங்கிய கண்டனப் பேரணி, காஞ்சிபுரம் சாலை, பழைய பேருந்து நிலையம், பஜார் வீதி வழியாக மீண்டும் தேரடியை அடைந்தது.
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com