69 ஊராட்சிச் செயலர் பணியிடங்களுக்கான நேர்காணல்: பி.இ., எம்.சி.ஏ. படித்தவர்கள் பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்டத்தின் 18 ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள 69 ஊராட்சிச் செயலர் பணியிடங்களுக்கு வெள்ளிக்கிழமை 

திருவண்ணாமலை மாவட்டத்தின் 18 ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள 69 ஊராட்சிச் செயலர் பணியிடங்களுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற நேர்காணலில் பி.இ., எம்.சி.ஏ. படித்தவர்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 18 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இந்த ஒன்றியங்களில் உள்ள ஊராட்சிகளில் 2018 பிப்ரவர் 28-ஆம் தேதி வரை மொத்தம் 69 ஊராட்சிச் செயலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான நேர்காணல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்டத்தில் உள்ள 18 ஊராட்சி ஒன்றியங்களிலும் இந்தத் தேர்வு நடைபெற்றது.
திருவண்ணாமலையில்..: திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட அண்டம்பள்ளம், இசுக்கழிகாட்டேரி, பெருமணம், தச்சம்பட்டு, வெறையூர் ஆகிய 5 ஊராட்சிச் செயலர் பணியிடங்களுக்கு 328 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களிடையே ஊராட்சி ஒன்றிய ஆணையர் பா.சஞ்சீவிகுமார், ஊரக வளர்ச்சிப் பிரிவு தலைமை கண்காணிப்பாளர் கருணாநிதி ஆகியோர் நேர்காணல் நடத்தினர்.
இதில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி) ஏ.எஸ்.லட்சுமி, மேலாளர் வி.அண்ணாமலை, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டு விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்களை சரிபார்த்தனர்.
துரிஞ்சாபுரத்தில்..: துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட குன்னியந்தல், சடையனோடை, சானானந்தல் ஆகிய 3 ஊராட்சிகளின் செயலர் பணியிடங்களுக்கு 129 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களிடையே ஊராட்சி ஒன்றிய ஆணையர் பி.பி.முருகன், தனி அலுவலர் என்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நேர்முகத் தேர்வு நடத்தினர்.
ஆரணி: ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சேவூர், இரும்பேடு, லாடவரம்,  காட்டேரி, புதுப்பட்டு, மாமண்டூர், மொழுகம்பூண்டி கிராமங்களுக்கான ஊராட்சிச் செயலர் பணிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திலகவதி, பாண்டியன் முன்னிலையில் நேர்காணல் நடைபெற்றது. இந்தப் பணியிடங்களுக்கு மொத்தம் 351 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
மேற்குஆரணி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த ஆகாரம், விண்ணமங்கலம், புங்கம்பாடி, கொளத்தூர் கிராமங்களுக்கான ஊராட்சிச் செயலர் பணிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் நேர்காணல் நடைபெற்றது. இந்தப் பணியிடங்களுக்கு மொத்தம் 144 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
செங்கம்: செங்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பக்கிரிபாளையம், காயம்பட்டு, சென்னசமுத்திரம் ஆகிய கிராமங்களுக்கான ஊராட்சிச் செயலர் பணியிடங்களுக்கு 138 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
இவர்களுக்கு செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் பழநி, ஆணையாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் நேர்காணல் நடைபெற்றது.
பி.இ., படித்தவர்கள் பங்கேற்பு: இதேபோல, மாவட்டம் முழுவதும் உள்ள 18 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்ற நேர்காணலில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இவர்களில் பலர் பி.இ., எம்.பி.ஏ., எம்.சி.ஏ. பட்டதாரிகள்.
இதேபோல, ஏராளமான பெண்கள் தங்களது கைக்குழந்தைகளுடன் நேர்காணலில் பங்கேற்றனர். நேர்காணலில் தகுதி பெற்றவர்களுக்கான பணி நியமன ஆணைகள் ஓரிரு தினங்களில் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com