கிடப்பில் போடப்பட்ட மேல்பேட்டை - பிரம்மதேசம் சாலைப் பணிகள்: கிராம மக்கள் அவதி

மேல்பேட்டை - பிரம்மதேசம் இடையே புதிதாக தார்ச் சாலை அமைப்பதற்காக அந்தச் சாலை தோண்டப்பட்டு 6 மாதங்களாக பணிகள்

மேல்பேட்டை - பிரம்மதேசம் இடையே புதிதாக தார்ச் சாலை அமைப்பதற்காக 
அந்தச் சாலை தோண்டப்பட்டு 6 மாதங்களாக பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், அவதியடைந்து வருவதாக கிராம மக்கள் குற்றஞ்சாட்டினர்.
வெம்பாக்கம் ஒன்றியத்தில் அமைந்துள்ள மேல்பேட்டையில் இருந்து பிரம்மதேசம் செல்லும் சாலையானது சுமார் 4.5 கி.மீ. தொலைவு கொண்டது. இந்தச் சாலையில் மேல்பேட்டை, சீம்பளம், பிரம்மதேசம் ஆகிய கிராமங்கள் அமைந்தள்ளன. 
இந்தக் கிராமங்களில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். விவசாயத்தையே பிரதான தொழிலாகக் கொண்டுள்ள இந்தப் பகுதி மக்கள், தங்களின் போக்குவரத்துத் தேவைக்காக மேல்பேட்டை - பிரம்மசேதம் சாலையையே நம்பி உள்ளனர்.
வெம்பாக்கம், பிரம்மதேசம் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவிகள், பணிக்குச் செல்வோர், அரசு அலுவலகங்கள், மருத்துவமனைக்குச் செல்வோர் இந்தச் சாலை வழியே பயணிக்கின்றனர். இந்தப் பகுதிக்கு பேருந்து வசதி இல்லாத காரணத்தால், பைக்குகளிலும், சைக்கிள்களிலும் மேல்பேட்டை - பிரம்மசேதம் சாலையில் கிராம மக்கள் தினந்தோறும் சிரமப்பட்டு சென்று வருகின்றனர்.
இந்தச் சாலையை சீரமைப்பதற்காக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஊரக வளர்ச்சித் துறையினர் தோண்டினர். 
ஆனால், சாலை சீரமைக்கப்படாமல் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதன் காரணமாக  மேல்பேட்டை - பிரம்மதேசம் சாலை ஜல்லிக்கற்களாக காட்சியளிப்பதால், இந்தச் சாலையில் இரு சக்கர வாகனங்களில் செல்லும்போது, வாகனங்கள் பழுதாகிவிடுகின்றன.
கடந்த சில நாள்களுக்கு முன்பு இரவில் விவசாய நிலத்தில் தண்ணீர் பாய்ச்சிவிட்டு இந்தச் சாலை வழியாக இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த விவசாயி ராஜேந்திரன், சாலை சீராக இல்லாததால் இரு சக்கர வாகனத்துடன் சாலையோர கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார்.
எனவே, இதுபோன்ற விபத்துகள் மேலும் நிகழாமல் தடுக்கும் வகையில், மேல்பேட்டை - பிரம்மதேசம் சாலையை விரைந்து சீரமைக்க ஊரக வளர்ச்சித் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி கிராம 
மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

"ஒரு வாரத்தில் பணிகள் முடிக்கப்படும்'
இதுகுறித்து வெம்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் (திட்டம்) கோபாலகிருஷ்ணன் கூறியதாவது:
மேல்பேட்டை - பிரம்மசேதம் இடையிலான சாலைப் பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு, ஒரு வாரத்துக்குள் முடிக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com