கேரள மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைப்பு

செய்யாறு கோட்டத்தில் இருந்து ரூ.25.17 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் கேரளத்துக்கு சனிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

செய்யாறு கோட்டத்தில் இருந்து ரூ.25.17 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் கேரளத்துக்கு சனிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு வழங்குவதற்காக செய்யாறு கோட்டத்தைச் சேர்ந்த செய்யாறு, வந்தவாசி, சேத்துப்பட்டு, வெம்பாக்கம் ஆகிய வட்டங்களில் உள்ள பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், வியாபாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் பலர் தாங்களாக முன்வந்து நிவாரணப் பொருள்களை வழங்கினர். 
அவ்வாறு வழங்கப்பட்ட நிவாரணப் பொருள்கள் செய்யாறு வட்டத்தில் ரூ.10,99, 888 மதிப்பிலும், வந்தவாசி வட்டத்தில் ரூ.6,26,540 மதிப்பிலும், சேத்துப்பட்டு வட்டத்தில் ரூ.5,21,209 மதிப்பிலும், வெம்பாக்கம் வட்டத்தில் ரூ.1,69,500 மதிப்பிலும் என மொத்தம் ரூ.25,17,097 மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் பெறப்பட்டன.
இந்த நிவாரணப் பொருள்களை செய்யாறு வருவாய்க் கோட்டாட்சியர் ஆர்.அன்னம்மாள் மேற்பார்வையில், வருவாய்த் துறையினர் 2 லாரிகள் மூலம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலமாக கேரள மாநிலத்துக்கு அனுப்பி வைத்தனர். 
வந்தவாசி: இதேபோல, கேரள மக்களுக்கு வழங்குவதற்காக நிவாரணப் பொருள்களை வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரி மாணவிகள் வந்தவாசி வருவாய்த் துறையினரிடம் சனிக்கிழமை வழங்கினர்.
இதில், 20 மூட்டை அரிசி, 200 பாய் மற்றும் ஆடைகள், மெழுகுவர்த்தி, கொசுவர்த்தி உள்ளிட்டவை நிவாரணப் பொருள்களாக வழங்கப்பட்டன.
இந்தப் பொருள்களை வந்தவாசி துணை வட்டாட்சியர் குமரவேலிடம் கல்லூரி நிறுவனர் பி.முனிரத்தினம் வழங்கினார். கல்லூரி துணை முதல்வர் கே.சுகுணா, வருவாய் ஆய்வாளர் அருணாச்சலம், கிராம நிர்வாக அலுவலர்கள் செந்தில்குமார், கணேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
திருவண்ணாமலையில்...: இதேபோல, ஜவ்வாதுமலை ஸ்பீடு தொண்டு நிறுவனம் சார்பில், கேரள மக்களுக்கு 10 மூட்டை அரிசியை திருவண்ணாமலை கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் சரஸ்வதியிடம் ஸ்பீடு தொண்டு நிறுவனத் தலைவர் எம்.சி.அசோக், செயலர் எம்.கலைவாணன், சமூக ஆர்வலர் இரா.பாலு உள்ளிட்டோர் சனிக்கிழமை வழங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com