குற்றச் செயல்களுக்கு துணைபோகும் காவலர்கள் மீது கடும் நடவடிக்கை: வேலூர் சரக டிஐஜி வனிதா

திருவண்ணாமலை மாவட்டத்தில் கந்து வட்டி கொடுப்பது, குற்றவாளிகளை கைது செய்யாமல் காலம் கடத்துவது

திருவண்ணாமலை மாவட்டத்தில் கந்து வட்டி கொடுப்பது, குற்றவாளிகளை கைது செய்யாமல் காலம் கடத்துவது போன்ற குற்றச் செயல்களுக்கு துணைபோகும் காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேலூர் சரக டிஐஜி வனிதா கூறினார்.
திருவண்ணாமலை மாவட்ட காவல் துறையில் பணிபுரியும் காவலர்களுக்கான மன அழுத்தத்தைப் போக்கும் வகையில் நிறை வாழ்வு பயிற்சி முகாம் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலையில் உள்ள காவலர்களுக்கான தங்கும் பாளையத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமை வேலூர் சரக டிஐஜி வனிதா தொடக்கிவைத்தார்.
பின்னர், அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: திருவண்ணாமலையில் போலி மருத்துவர் கருக்கலைப்பில் ஈடுபட்டது கொலை வழக்கைவிட மோசமான குற்றம். எனவே, போலி மருத்துவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் காவலர்கள் தற்கொலைக்கு முயற்சிக்கும் சம்பவங்களுக்கும், காவல் துறைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. 
இருப்பினும், காவலர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில், தற்போது மனநல மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் பயிற்சி அளிக்கின்றனர். இந்தப் பயிற்சி தொடர்ந்து ஓராண்டு வரை நடைபெறும்.
திருவண்ணாமலையில் இரு சக்கர வாகனங்களை பழுதுபார்ப்பவர் கந்து வட்டிக் கொடுமையால் நகர காவல் நிலையம் எதிரே அண்மையில் தற்கொலைக்கு முயன்றார். கந்து வட்டிக் கொடுமையில் ஈடுபட்டது திருவண்ணாமலை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரியும் காவலர் என்பதால், உரிய விசாரணை நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட காவலர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கண்ணமங்கலம் காவல் நிலையத்தில் முன்விரோதம் காரணமாக சித்தியின் 2 கால்களையும் உடைத்த இளைஞரையும், அவரது மனைவியையும் ஒரு மாதமாக போலீஸார் கைது செய்யாமல் காலம் கடத்துவது குறித்து எனது கவனத்துக்கு தற்போது வந்துள்ளது.
இந்த வழக்கில் கண்டிப்பாக குற்றவாளியை போலீஸார் கைது செய்திருக்க வேண்டும். கையூட்டு பெறும் நோக்கிலும், குற்றச் செயல்களுக்கு துணைபோகும் வகையிலும் செயல்படும் காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இடைத்தரகர்கள் 12 பேர் கைது: இதையடுத்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி கூறியதாவது: திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து செம்மரக்கட்டை கடத்தலுக்குச் செல்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. கடந்த 6 மாதங்களில் 32 இடைத்தரகர்கள் கண்டறியப்பட்டு, 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மற்றவர்கள் விரைவில் கைது செய்யப்படுவர். இவர்களுக்கான மாற்றுத் தொழில் குறித்து மாவட்ட நிர்வாகத்துடன் கலந்தாலோசனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பேட்டியின்போது, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வனிதா, டிஎஸ்பிக்கள் ஸ்ரீதர், சின்னராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com