380 டன் பாறையுடன் நெடுஞ்சாலையை அடைந்தது லாரி!

ஒரே கல்லில் 64 அடி உயர பெருமாள் சிலையை வடிவமைப்பதற்காக, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பகுதியில் தோண்டி, அறுத்து எடுக்கப்பட்டு பெங்களூரு கொண்டு செல்லப்படும் 380 டன் கல் பாறையை

ஒரே கல்லில் 64 அடி உயர பெருமாள் சிலையை வடிவமைப்பதற்காக, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பகுதியில் தோண்டி, அறுத்து எடுக்கப்பட்டு பெங்களூரு கொண்டு செல்லப்படும் 380 டன் கல் பாறையை ஏற்றிய லாரி ஞாயிற்றுக்கிழமை இரவு வந்தவாசி - திண்டிவனம் பிரதான நெடுஞ்சாலையை அடைந்தது.

பெங்களூரு தெற்கு ஈஜிபுரா பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீகோதண்டராம சுவாமி கோயிலில் 64 அடி உயர ஸ்ரீவிஸ்வரூப கோதண்டராம சுவாமி சிலை அமைப்பதற்காக இந்தக் கல் பாறை, வந்தவாசி அருகே கொரக்கோட்டை கிராமத்தில் உள்ள பாறைக் குன்றில் அறுத்து எடுக்கப்பட்டு, கடந்த சில நாள்களுக்கு முன் 240 டயர்கள் கொண்ட கார்கோ லாரியில் ஏற்றப்பட்டது. பின்னர், அங்கிருந்து கொரக்கோட்டை - செட்டிக்குளம் சாலைக்கு கொண்டுவரப்பட்டது. ஆனால், இந்தச் சாலையில் லாரியின் டயர்கள் அடிக்கடி மண்ணில் புதைந்ததாலும், டயர்கள் வெடித்ததாலும் லாரியை நகர்த்துவதில் பெரும் தாமதம் ஏற்பட்டது.

இதையடுத்து, அந்தச் சாலை விரைவாக சீர்செய்யப்பட்டு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் லாரியை நகர்த்தும் பணி மீண்டும் தொடங்கப்பட்டது. இதையடுத்து, அங்கிருந்து சுமார் 300 மீட்டர் தொலைவு கடந்த லாரி, ஞாயிற்றுக்கிழமை மாலையில் தெள்ளாறு - தேசூர் இரட்டை வழி தார்ச்சாலையை அடைந்தது. இதனால், சிலை ஏற்பாட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பின்னர், அங்கிருந்து மீண்டும் பயணத்தை தொடங்கிய லாரியை வழியோரம் காத்திருந்த பொதுமக்கள் நிறுத்தி சுவாமி முகம் செதுக்கிய 380 டன் பாறைக்கு தீபாராதனை காட்டி வழிபட்டனர். இதைத் தொடர்ந்து, சுமார் 3 கி.மீ. தொலைவு சென்ற லாரி, வந்தவாசி - திண்டிவனம் பிரதான நெடுஞ்சாலையில் உள்ள தெள்ளாறு வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில் உள்ள பகுதியை ஞாயிற்றுக்கிழமை இரவு அடைந்தது. இதைக் காண்பதற்காக அந்தப் பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு குவிந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com