சேவூரில் 300 கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி: அமைச்சர்கள் பங்கேற்பு

ஆரணியை அடுத்த சேவூரில் புதன்கிழமை நடைபெற்ற கர்ப்பிணிப் பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள்

ஆரணியை அடுத்த சேவூரில் புதன்கிழமை நடைபெற்ற கர்ப்பிணிப் பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள் வி.சரோஜா, சேவூர் எஸ்.இராமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு 300 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்தி வைத்து சிறப்புரையாற்றினர்.
ஆரணியை அடுத்த சேவூர் தனியார் மண்டபத்தில் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் ஆகியவை சார்பில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார். இதில், சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை அமைச்சர் வி.சரோஜா கலந்துகொண்டு பேசியதாவது:
தமிழகத்தில் சுமார் 55 ஆயிரம் அங்கன்வாடிகள் மூலம் கர்ப்பிணிப் பெண்களுக்கு ரூ.1,791 கோடி செலவில் தேவையான உதவிகளை அரசு செய்து வருகிறது. அங்கன்வாடிகள் மூலம் குழந்தை வளர்ப்பு குறித்தும், தாய்ப்பால் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதுடன், சத்துமாவு வழங்குதல் உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றனர். இதனால் ஆண்டுக்கு 43 லட்சம் கர்ப்பிணிகளும், 34 லட்சம்  குழந்தைகளும் பயனடைந்து வருகின்றனர்.
1982-இல் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் கொண்டு வந்த சத்துணவுத் திட்டத்தின் மூலம் 43 ஆயிரம் மையங்கள் அமைக்கப்பட்டு, அதில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். 
இதன் மூலம் சுமார் 53.3 லட்சம் குழந்தைகள் பயனடைகின்றனர். இந்தத் திட்டத்துக்கு  மேலும் பலம் சேர்க்கும் வகையில், 10 வகையான சத்துணவு வகைகள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் வழங்கப்பட்டு, தற்போது சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 1992-இல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த தொட்டில் குழந்தை திட்டம் மூலம் இதுவரை 5,502 குழந்தைகள் வளர்த்து வரப்படுகின்றனர். இந்த திட்டத்தினால் தமிழகத்தில் சிசு மரணம் இல்லை என்றார்.
இதைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பேசியதாவது:
தமிழக மக்களுக்கு அனைத்து திட்டங்களையும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முழுமையாக செயல்படுத்தி வந்தார். இதனைத் தொடர்ந்து, தற்போதைய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரால் அந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களான தொட்டில் குழந்தை  திட்டம், பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், மகளிர் சுகாதார வளாகங்கள், 24 மணி நேரம் மகப்பேறு மருத்துவ சேவை அளிக்கும் திட்டம், திருமண உதவித் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறோம்.
 அரசு மருத்துவமனைகளில் கர்ப்பிணிப் பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு 16 வகையான பொருள்கள் அடங்கிய அம்மா குழந்தை நல பரிசுப் பெட்டகம் வழங்கும் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், இளம் பெண்களுக்கு தொழிற்பயிற்சி, கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு, பாலூட்டும் கர்ப்பிணிப் பெண்களுக்கு இணை உணவு வழங்கப்பட்டு வருகிறது என்றார்.
நிகழ்ச்சியில் செய்யார் எம்எல்ஏ தூசி கே.மோகன், எம்.பி. செஞ்சி வே.ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட மாவட்ட அலுவலர் க.தமிழரசி, மாவட்ட திட்ட அலுவலர் லோகநாயகி, முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் க.சங்கர், ஒன்றியச் செயலர் பி.ஆர்.ஜி.சேகர், திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலர் கே.இராஜன், நகர நிர்வாகி பாரிபாபு, பாசறை மாவட்டச் செயலர் ஜி.வி.கஜேந்திரன், மாவட்ட துணைச் செயலர்கள் டி.கருணாகரன், ரமணிநீலமேகம், முன்னாள் எம்எல்ஏ ஜெமினிராமச்சந்திரன், முன்னாள் மாவட்டக் கவுன்சிலர் சேவூர் ஜெ.சம்பத், முன்னாள் கவுன்சிலர் திருமால், அரையாளம் வேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, 300 கர்ப்பிணிப் பெண்களுக்கு சமூக நலத் துறை அமைச்சர் வி.சரோஜா வளைகாப்பு செய்து வைத்தார். மேலும், கர்ப்ப காலத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து கேட்கப்பட்ட 28 கேள்விகளுக்கு பதிலளித்த 3 பெண்களுக்கு பரிசுகளை வழங்கினார். 
இதில் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த கர்ப்பிணிகள் சிலரும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com