குப்பை உரக் கிடங்கு அமைக்க எதிர்ப்பு: வந்தவாசி நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

வந்தவாசி புதிய பேருந்து நிலையத்தை ஒட்டி குப்பை உரக் கிடங்கு அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து, வந்தவாசி நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனர்.

வந்தவாசி புதிய பேருந்து நிலையத்தை ஒட்டி குப்பை உரக் கிடங்கு அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து, வந்தவாசி நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனர்.
வந்தவாசி - செய்யாறு சாலை, எச்சூரில் வந்தவாசி நகராட்சிக்குச் சொந்தமான குப்பை சேமிப்புக் கிடங்கு உள்ளது. இங்கு குப்பையை உரமாக்கும் திட்டத்தை செயல்படுத்த வந்தவாசி நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கு அந்தக் கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால், அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.
இதையடுத்து, வந்தவாசி புதிய பேருந்து நிலையத்தையொட்டி பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட பகுதியில் இரண்டும், வந்தவாசி கே.வி.டி. நகரில் பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட பகுதியில் ஒன்றும் என மொத்தம் 3 குப்பை உரக் கிடங்குகளை ரூ.1.42 கோடி செலவில் அமைக்க நகராட்சி சார்பில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது.
இந்த நிலையில், வந்தவாசி புதிய பேருந்து நிலையத்தையொட்டி குப்பை உரக் கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, புதிய பேருந்து நிலையத்தை ஒட்டியுள்ள காமராஜர் நகர், கேசவ நகர், தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்புப் பகுதி ஆகியவற்றைச் சேர்ந்த பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனர். மேலும், இது தொடர்பாக நகராட்சி ஆணையர் பார்த்தசாரதியிடம் அவர்கள் அளித்த மனு விவரம்:
வந்தவாசி புதிய பேருந்து நிலையம் சுமார் ரூ.6 கோடி செலவில் கட்டப்பட்டு இயங்கி வருகிறது. ஆனால், பல்வேறு காரணங்களால் முழு வீச்சில் செயல்படவில்லை. இந்தப் பகுதியில் குப்பை உரக் கிடங்கு அமைந்தால், பயணிகளுக்கு அதிக சிரமம் ஏற்படும். இதனால் பேருந்து நிலையம் செயல்படாமல் முடங்க வாய்ப்பு உள்ளது.
மேலும், அருகில் வசிக்கும் எங்களுக்கும் பல்வேறு நோய்கள் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. இதேபோல, கே.வி.டி நகரில் குப்பை உரக் கிடங்கு அமைய உள்ள இடத்தைச் சுற்றிலும் பொதுமக்கள் வசிக்கின்றனர். எனவே, இந்த 2 இடங்களிலும் குப்பை உரக் கிடங்குகளை அமைப்பதை நகராட்சி நிர்வாகம் கைவிட்டு, அந்த இடங்களில் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆணையர் பார்த்தசாரதி உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் புறப்பட்டுச் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com