அரசுப் பள்ளிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

செய்யாறு, போளூர் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி செவ்வாய், புதன்கிழமைகளில் ஆய்வு மேற்கொண்டார்.

செய்யாறு, போளூர் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி செவ்வாய், புதன்கிழமைகளில் ஆய்வு மேற்கொண்டார்.
செய்யாறு கல்வி மாவட்டம், இராந்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் படிப்புத் திறன், எழுத்துத் திறன் ஆகியவை குறித்து மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி புதன்கிழமை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, மாணவர்கள் மிகவும் சிரமப்பட்டு எழுத்துக்கூட்டி படித்ததை அறிந்தார். பின்னர், கடந்த கல்வியாண்டில் 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் குறைந்ததற்கான காரணங்களை ஆசிரியர்களிடம் கேட்டறிந்தனர்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற ஆய்வின் போது, மாணவர்களின் கல்வித்தரம் உயர்ந்திடும் வகையில், ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
மேலும், படிப்பறிவு இல்லாத மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள கூலி விவசாயிகளும், தொழிலாளிகளும் தங்களது பிள்ளைகளும் படித்து சமுதாயத்தில் மேலோங்கி வருவதற்காக பிள்ளைகளை அரசுப் பள்ளிக்கு கல்வி கற்க அனுப்பி வைக்கின்றனர். பெற்றோர்களின் கனவுகளை நாம் கலைக்கக்கூடாது.
எனவே, மெதுவாக படிக்கும் மாணவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு புரியும்படி அவர்களது மனநிலையை உணர்ந்து கல்வி கற்பிக்க ஆசிரியர்கள் முன்வர வேண்டும் என ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்தார்.
ஆய்வின் போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயகுமார், கோட்டாட்சியர் பி.கிருபானந்தம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
போளூர் பகுதியில் ஆய்வு: இதேபோல, போளூர், களம்பூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் திறன், வருகைப் பதிவேடு, ஆசிரியர்களின் வருகைப் பதிவேடுகளை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார். மேலும், மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவை பார்த்து ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயசந்திரன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com