வந்தவாசி அருகே கார்-லாரி மோதல்: தம்பதி உள்பட 5 பேர் சாவு
By DIN | Published on : 13th January 2018 09:23 AM | அ+அ அ- |
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே வெள்ளிக்கிழமை நள்ளிரவில் காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் தம்பதி உள்பட 5 பேர் உடல் நசுங்கி இறந்தனர்.
வந்தவாசியை அடுத்துள்ள கூத்தம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு (45). சென்னையில் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகிறார். இவர் பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்னையிலிருந்து கூத்தம்பட்டுக்கு வெள்ளிக்கிழமை இரவு கார், பைக்கில் தனது குடும்பத்தினர், உறவினர்களுடன் புறப்பட்டார்.
காரில் வேலு (45), அவரது மனைவி செல்வி (43), மகள் பிருந்தா (19), உறவினர் முனியப்பன் மகன் சந்தோஷ்குமார் (23), சந்தோஷின் நண்பர் நிதீஷ் (23) ஆகியோர் வந்தனர். வந்தவாசியை அடுத்துள்ள விலாங்காடு கூட்டுச் சாலை அருகே வந்தபோது, தென்னாங்கூர் கிராமத்தைச் சேர்ந்த முருகன் (45), அவரது மகன் சந்தோஷ் (21) ஆகியோர் இருசக்கர வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு பேசிக்கொண்டிருந்தனராம். எதிர்பாராதவிதமாக இவர்கள் மீது மோதிய கார், எதிரே காஞ்சிபுரத்தில் இருந்து வந்தவாசி நோக்கி வந்த லாரி மீதும் மோதியது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல நொறுங்கியது. காரிலிருந்த வேலு, செல்வி, பிருந்தா, சந்தோஷ்குமார், நிதீஷ் ஆகிய 5 பேரும் உடல் நசுங்கி இறந்தனர்.
இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பேசிக் கொண்டிருந்த முருகன் காயமடைந்தார். இவர் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.