அம்மா திட்ட முகாம்: 120 பேருக்கு நலத் திட்ட உதவிகள்

திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அம்மா திட்ட முகாமில் 120 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அம்மா திட்ட முகாமில் 120 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
திருவண்ணாமலையை அடுத்த தேவனந்தல் கிராமத்தில் நடைபெற்ற அம்மா திட்ட முகாம், கண் சிகிச்சை முகாம், கால்நடை மருத்துவ முகாம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு வட்டாட்சியர் ஆர்.ரவி தலைமை வகித்தார். சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் டி.ரமேஷ்குமார், வட்ட வழங்கல் அலுவலர் முருகன், வருவாய் ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருவண்ணாமலை கோட்டாட்சியர் உமாமகேஸ்வரி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றுக் கொண்டார். பின்னர், 30 விவசாயிகளுக்கு சிறு, குறு விவசாயிச் சான்று, 10 பேருக்கு பட்டா மாறுதல் சான்றுகள் என மொத்தம் 40 பேருக்கு அவர் நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.
முகாமின் ஒரு பகுதியாக நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் காட்டாம்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கே.ரமேஷ் ராவ் தலைமையிலான மருத்துவக் குழுவினர் 28 பேருக்கு சிகிச்சை அளித்தனர். இவர்களில் 8 பேர் அறுவைச் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டனர். இதேபோல, இலவச கால்நடை மருத்துவ முகாமும் நடைபெற்றது.
முகாமில், கால்நடை மருத்துவர் வினோத்குமார், வருவாய் ஆய்வாளர் க.விஜயரங்கன், கிராம நிர்வாக அலுவலர் ஏ.ஹரிகிருஷ்ணன் உள்பட பல்வேறு அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
போளூர்: போளூரை அடுத்த பொத்தரை ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. முகாமுக்கு வட்டாட்சியர் அ.பாலாஜி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து 30 மனுக்களை பெற்றார். இதில் 10 பேருக்கு சிறு, குறு விவசாயிச் சான்று வழங்கப்பட்டது.
மேலும், வாக்காளர் தினத்தை முன்னிட்டு, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சு, கோலப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) கிருஷ்ணமூர்த்தி பரிசு வழங்கினார்.
முகாமில், வருவாய் ஆய்வாளர் தமிழரசி, கிராம நிர்வாக அலுவலர்கள் தமிழ்செல்வன், சுதாகர் மற்றும் வருவாய்த் துறையினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
செங்கம்: செங்கத்தை அடுத்த புளியம்பட்டி, ஆண்டிப்பட்டி, குருமப்பட்டி ஆகிய கிராமங்களுக்கான அம்மா திட்ட முகாம் புளியம்பட்டி கிராமத்தில் நடைபெற்றது.
முகாமில் பல்வேறு நலத் திட்ட உதவிகள் கோரி பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்ட மனுக்களை அளித்தனர்.
பின்னர், பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வட்டாட்சியர் உதயகுமார் தலைமை வகித்தார். சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் ரேணுகா முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட சமூகப் பாதுகாப்புத் திட்ட அலுவலர் குணசேகரன் கலந்து கொண்டு, 75 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.
முகாமில் துணை வட்டாட்சியர் செல்வராஜ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோவன், கிராம நிர்வாக அலுவர்கள் நேரு, ரஞ்சித், ராஜேந்திரபிரசாத் உள்பட வருவாய்த் துறையினர் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com