ஏரியில் ஐம்பொன் அம்மன் சிலை கண்டெடுப்பு

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அல்லி நகர் கூர் ஏரியில் வெள்ளிக்கிழமை மீன் பிடித்த போது அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அல்லி நகர் கூர் ஏரியில் வெள்ளிக்கிழமை மீன் பிடித்த போது அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது.
போளூர் பேரூராட்சியைச் சேர்ந்த அல்லி நகர் பகுதியில் கூர் ஏரி உள்ளது. இந்த ஏரியில் அந்தப் பகுதியில் வசிக்கும் மீனவர் முத்துகுமரன் வெள்ளிக்கிழமை மீன் பிடித்துக் கொண்டிருந்தார். மீனுக்கு வலை வீசி இழுத்தபோது கடினமாக இருக்கவே, முத்துகுமரன் அருகில் மீன் பிடித்துகொண்டிருந்த மணிகண்டன், பிரபாகரன் ஆகியோரை துணைக்கு அழைத்து மீன் வலையை கரைக்கு இழுத்து வந்தார்.
அப்போது, மீன் வலையில் சாக்கு மூட்டை சிக்கியிருந்தது தெரிய வந்தது. அந்தச் சாக்கு மூட்டையைப் பிரித்துப் பார்த்த போது, அதில் சுமார் 2 அடி உயரம், 45 கிலோ எடைகொண்ட ஐம்பொன் அம்மன் சிலை இருந்தது தெரியவந்தது.
பின்னர், தகவலறிந்து அங்கு வந்த போளூர் காவல் ஆய்வாளர் சுரேஷ்பாபு மற்றும் போலீஸார் சிலையை மீட்டு வட்டாட்சியர் அ.பாலாஜியிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து, அந்தச் சிலை வருவாய்த் துறை சார் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இதனிடையே, இந்த அம்மன் சிலையானது போளூரை அடுத்த வசூர் ஊராட்சியில் வேலூர் - திருவண்ணாமலை சாலை அருகே அமைந்துள்ள செல்லியம்மன் கோயில் சிலை என்றும், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருடுபோனது என்றும் அந்தக் கோயில் தர்மகர்த்தா பெருமாள், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சரவணன், ஊர் பொதுமக்கள் தெரிவித்தனர். மேலும், சிலை வாங்கியதற்கான ரசீதையும் வருவாய்த் துறையினரிடம் அவர்கள் காண்பித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com