சிறப்புப் பள்ளிகளுக்கான கிராமிய பொங்கல் விழா போட்டிகள்: மாற்றுத் திறனாளி மாணவர்கள் பங்கேற்பு

திருவண்ணாமலையில் நடைபெற்ற சிறப்புப் பள்ளிகளுக்கான கிராமிய பொங்கல் விழா போட்டிகளில் மாற்றுத் திறன் கொண்ட மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலையில் நடைபெற்ற சிறப்புப் பள்ளிகளுக்கான கிராமிய பொங்கல் விழா போட்டிகளில் மாற்றுத் திறன் கொண்ட மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில், சிறப்புப் பள்ளிகளுக்கான கிராமிய பொங்கல் விழாப் போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்து, போட்டிகளை தொடக்கி வைத்தார்.
மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் பா.ஜான்சி, மாவட்ட சமூக நல அலுவலர் தா.டார்த்தி, துணை ஆட்சியர் (பயிற்சி) சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருவண்ணாமலையை அடுத்த சம்மந்தனூர் ரங்கம்மாள் நினைவு காது கேளாதோருக்கான சிறப்புப் பள்ளி, ரங்கம்மாள் மன வளர்ச்சி குன்றியோருக்கான பகல் நேர பராமரிப்பு மையம், சூசை நகர் அமலராகினி பார்வையற்றோருக்கான சிறப்புப் பள்ளி, தண்டராம்பட்டு லைப்லைன் மன வளர்ச்சி குன்றியோருக்கான சிறப்புப் பள்ளி, திருவண்ணாமலை சைல்டு லைன் மன வளர்ச்சி குன்றியோருக்கான சிறப்புப் பள்ளி, ஜமுனாமரத்தூர் சினேக ஜோதி மன வளர்ச்சி குன்றியோருக்கான சிறப்புப் பள்ளி, அஸ்வநாதசுரனை லிட்டில் ஆர்ட்ஸ் மன வளர்ச்சி குன்றிய பெண்களுக்கான இல்லம், களம்பூர் பேன்யன் மன வளர்ச்சி குன்றியோருக்கான சிறப்புப் பள்ளி, ஆரணி விக்காஸ் ஜீவன் பகல் நேர பராமரிப்பு மையம், கொண்டம் காரியந்தல் மழலை மன வளர்ச்சி குன்றியோருக்கான பகல் நேர பராமரிப்பு மையம், சேத்துப்பட்டு ரீட்ஸ் மன வளர்ச்சி குன்றியோருக்கான சிறப்புப் பள்ளி என மொத்தம் 11 சிறப்புப் பள்ளிகளைச் சேர்ந்த மாற்றுத் திறன் கொண்ட மாணவ, மாணவிகள் இந்தப் போட்டிகளில் கலந்து கொண்டனர்.
பொங்கல் விழா போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்புப் பள்ளி மாணவர்கள் வெளிப்படுத்திய கலை, பண்பாடு, கோலம், படைப்பாற்றல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பரிசுகள் வழங்கப்பட்டன. அதன்படி, சம்மந்தனூர் ரங்கம்மாள் நினைவு காது கேளாதோருக்கான சிறப்பு பள்ளிக்கு முதல் பரிசும், சம்மந்தனூர் ரங்கம்மான் மன வளர்ச்சி குன்றியோருக்கான பகல் நேர பராமரிப்பு மையம், சூசை நகர் அமலராகினி பார்வையற்றோருக்கான சிறப்புப் பள்ளிகளுக்கு இரண்டாம் பரிசுகளும், களம்பூர் பேன்யன் மன வளர்ச்சி குன்றியோருக்கான சிறப்புப் பள்ளிக்கு மூன்றாம் பரிசும் வழங்கப்பட்டன.
இதுதவிர போட்டியில் கலந்து கொண்ட அனைத்து சிறப்புப் பள்ளிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியில் பங்கேற்ற சிறப்புப் பள்ளிகள் தமிழகத்தின் பாரம்பரியத்தை வெளிக்காட்டும் வகையில் மண் பானையில் பொங்கலிட்டு, வண்ணமயமான கோலங்களை வரைந்து, வாழை இலையில் கரும்புகள், காய்கறிகள், பழங்களை வைத்துப் படையலிட்டு சிறப்பான முறையில் பொங்கல் விழாவை கொண்டாடின.
விழாவில், சிறப்புப் பள்ளிகளின் இயக்குநர்கள், பள்ளித் தாளாளர்கள், தலைமை ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள், மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com