மனு அளித்த ஒரே வாரத்தில் தொழுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வீட்டுமனைப் பட்டா: ஆட்சியர் வழங்கினார்

வந்தவாசியில் தொழுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மனு அளித்த ஒரே வாரத்தில் இலவச வீட்டுமனைப் பட்டாவையும், அந்த வீட்டுமனையில்

வந்தவாசியில் தொழுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மனு அளித்த ஒரே வாரத்தில் இலவச வீட்டுமனைப் பட்டாவையும், அந்த வீட்டுமனையில் ரூ.2.10 லட்சம் செலவில் பசுமை வீடு கட்டுவதற்கான உத்தரவையும் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி வெள்ளிக்கிழமை நேரில் வழங்கினார்.
வந்தவாசியை அடுத்த வல்லம் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி மணி (60). இவரது மனைவி மல்லிகா (55). காதல் திருமணம் செய்து கொண்ட இருவரும் வந்தவாசி கோட்டை மூலை அருகில் உள்ள பிள்ளையார் கோயில் தெருவில் கோட்டை அகழியை ஒட்டிய புறம்போக்கு பகுதியில் கடந்த 35 ஆண்டுகளாக குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் மல்லிகா தொழுநோயால் பாதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, மல்லிகாவுக்கு நோய் பாதிப்பு அதிகமாகி மோசமான நிலையை அடையவே, மணி வேலைக்கு செல்ல முடியாமல் மல்லிகாவை கவனித்து வந்துள்ளார். மேலும், தங்கியிருந்த கூரை வீடும் சேதமடையத் தொடங்கியது. இதனால் வறுமையின் பிடியில் சிக்கிய இவர்களுக்கு வந்தவாசி அருவி அறக்கட்டளைத் தலைவர் ஏ.ஜெ.ரூபன் உதவி செய்து வந்தார். கூரை வீட்டுக்கு பதில் தகரத்திலான இரும்பு ஷெட் அமைத்துக் கொடுத்த அவர், இருவருக்குமான உணவு செலவையும் பராமரித்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை வந்தவாசியில் நடைபெற்ற அங்கன்வாடி பணியாளர்களுக்கான கருத்தரங்கில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்றார். அப்போது, வந்தவாசி சிநேகிதன் அறக்கட்டளை நிர்வாகி ஈ.ஆரோக்கியதாஸ், வந்தவாசி அன்பு சிநேகிதன் அறக்கட்டளை நிர்வாகி பி.ராதா ஆகியோரின் உதவியுடன் மல்லிகா இலவச வீட்டுமனைப் பட்டா கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
அப்போது, மல்லிகாவின் பரிதாப நிலைமையை கண்ட மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, மனு அளித்த ஒரே வாரத்திலேயே மல்லிகாவுக்கு சளுக்கை ஊராட்சியில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கவும், அந்த வீட்டுமனையில் தமிழக அரசின் பசுமை வீடு கட்டித் தரவும் நடவடிக்கை எடுத்தார்.
இந்த நிலையில் வந்தவாசிக்கு வெள்ளிக்கிழமை வந்த மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, மல்லிகாவின் இருப்பிடத்துக்கு நேரில் சென்று வீட்டுமனைப் பட்டா மற்றும் பசுமை வீட்டுக்கான உத்தரவை அவரிடம் வழங்கினார்.
அப்போது, செய்யாறு கோட்டாட்சியர் கிருபானந்தம், வந்தவாசி வட்டாட்சியர் கே.ஆர்.முரளிதரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எஸ்.பாரி, குப்புசாமி, வந்தவாசி அருவி அறக்கட்டளைத் தலைவர் ஏ.ஜெ.ரூபன், வந்தவாசி சிநேகிதன் அறக்கட்டளை நிர்வாகி ஈ.ஆரோக்கியதாஸ், வந்தவாசி அன்பு சிநேகிதன் அறக்கட்டளை நிர்வாகி பி.ராதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com