கோழிப் பண்ணையில் கொத்தடிமைகளாக இருந்த 22 பேர் மீட்பு

வந்தவாசி அருகே தனியார் கோழிப் பண்ணையில் கொத்தடிமைகளாக இருந்த 6 குடும்பங்களைச் சேர்ந்த 22 பேரை வருவாய்த் துறையினர் வெள்ளிக்கிழமை மீட்டனர்.

வந்தவாசி அருகே தனியார் கோழிப் பண்ணையில் கொத்தடிமைகளாக இருந்த 6 குடும்பங்களைச் சேர்ந்த 22 பேரை வருவாய்த் துறையினர் வெள்ளிக்கிழமை மீட்டனர்.
வந்தவாசியை அடுத்த மணிமங்கலம் கிராமத்தில் தயாளன் (40) கோழிப் பண்ணை நடத்தி வருகிறார். இந்தப் பண்ணையில் கொத்தடிமைகளாக ஊழியர்கள் நடத்தப்படுவதாக சென்னை சர்வதேச நீதிக் குழுமம் சார்பில், செய்யாறு கோட்டாட்சியர் அன்னம்மாளிடம் புகார்  தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, செய்யாறு கோட்டாட்சியர் அன்னம்மாள், வந்தவாசி வட்டாட்சியர்கள் ஆர்.முரளிதரன், வாசுகி, சர்வதேச நீதிக் குழும நிர்வாகிகள் ஜபா, டிவைன் மற்றும் கீழ்க்கொடுங்காலூர் போலீஸார் வெள்ளிக்கிழமை அந்த கோழிப் பண்ணைக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, அந்தக் கோழிப் பண்ணையில் வந்தவாசியை அடுத்த நெடுங்கலைச் சேர்ந்த பி.முருகன் (32), இவரது மகள் பவித்ரா (14), வந்தவாசியை அடுத்த பருவதம்பூண்டியைச் சேர்ந்த ராஜேஷ் (18), இவரது மனைவி சித்ரா (17), விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த கன்னிகாபுரத்தைச் சேர்ந்த ரங்கநாதன் (20), இவரது மனைவி பவானி (18 ) மற்றும் கே.முருகன் (21), இவரது மனைவி வள்ளியம்மாள் (20), பொன்னேரியை அடுத்த ஆரம்பாக்கத்தைச் சேர்ந்த சங்கர் (22), இவரது மனைவி நந்தினி (20) மற்றும் வல்லரசு (20), இவரது மனைவி காமாட்சி (19) மற்றும் இவர்களது குழந்தைகள் என மொத்தம் 6 குடும்பங்களைச் சேர்ந்த 22 பேர் கடந்த 4 ஆண்டுகளாக கொத்தடிமைகளாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, 22 பேரையும் மீட்ட வருவாய்த் துறையினர், அவர்களை வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர்.
இதுகுறித்து மீட்கப்பட்ட குடும்பத்தினர் கூறியதாவது: எங்களை இரவு பகல் பாராமல் வேலை வாங்குவார்கள். ஒரு குடும்பத்துக்கு வாரம் ஒருமுறை ரூ.200 மட்டுமே கூலியாக வழங்குவர். சொந்த ஊருக்குச் செல்ல எங்கள் யாருக்கும் அனுமதியில்லை. மேலும், எந்தவித அடிப்படை வசதிகளும் கோழிப் பண்ணையில் எங்களுக்கு செய்து கொடுக்கவில்லை என்றனர்.
இதுகுறித்து வருவாய்த் துறையினர் தெரிவித்ததாவது: மீட்கப்பட்ட அனைவரும் வந்தவாசியை அடுத்த பருவதம்பூண்டிக்கு செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர். எனவே, இவர்கள் அனைவரும் பருவதம்பூண்டிக்கு அனுப்பி வைக்கப்படுவர். மேலும், தலைமறைவாக உள்ள கோழிப் பண்ணை உரிமையாளர் தயாளன் மீது காவல் துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com