மனித உரிமைகள் நீதிமன்றத்தில் முன்னாள் எம்எல்ஏ வாக்குமூலம்

செங்கம் அருகே பசுமை வழிச் சாலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்திக்கச் சென்றபோது, கைது செய்யப்பட்டது தொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட மனித உரிமைகள் நீதிமன்றத்தில்

செங்கம் அருகே பசுமை வழிச் சாலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்திக்கச் சென்றபோது, கைது செய்யப்பட்டது தொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட மனித உரிமைகள் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையில் ஆஜராகி முன்னாள் எம்எல்ஏ பி.டில்லிபாபு வாக்குமூலம் அளித்தார்.
சேலம் - சென்னை பசுமை வழிச் சாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, திருவண்ணாமலை மாவட்டத்தின் அனைத்துக் கிராமங்களிலும் கடந்த ஜூன் 26-ஆம் தேதி விவசாயிகள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கம் பகுதி வீடுகளில் கருப்புக்கொடி கட்டியிருந்த விவசாயிகளை நேரில் சந்திக்கச் சென்ற அரூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகியுமான பி.டில்லிபாபு, உணவகத்தில் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது, செங்கம் டிஎஸ்பி சுந்தரமூர்த்தி அவரை வலுக்கட்டாயமாக கைது செய்தார். மேலும், பி.டில்லிபாபுவை டிஎஸ்பி சுந்தரமூர்த்தி தாக்கியதாகவும், இழிவாகப் பேசியதாகவும் கூறப்படுகிறது.
போலீஸாரின் இந்தச் செயல் மனித உரிமைகளை மீறிய செயல் என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திருவண்ணாமலையில் உள்ள மனித உரிமைகள் நீதிமன்றத்தில் கடந்த 10-ஆம் தேதி பி.டில்லிபாபு புகார் மனு அளித்திருந்தார்.
இந்த மனுவின் மீதான விசாரணை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது, பி.டில்லிபாபு நேரில் ஆஜராகி, மனித உரிமைகளை மதிக்காமல் அநாகரிகமாகவும், தகாத செயலிலும் டிஎஸ்பி சுந்தரமூர்த்தி ஈடுபட்டார். எனவே, அவர் மீதும், அவரைத் தூண்டிய திருவண்ணாமலை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வாக்குமூலம் அளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com