9 வட்டங்களில் ஜமாபந்தி தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 12 வட்டங்களில் 9 வட்டங்களில் வியாழக்கிழமை வருவாய் தீர்வாய கணக்குகளை சரிபார்க்கும்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 12 வட்டங்களில் 9 வட்டங்களில் வியாழக்கிழமை வருவாய் தீர்வாய கணக்குகளை சரிபார்க்கும் ஜமாபந்தி தொடங்கியது. வெள்ளிக்கிழமை 3 வட்டங்களில் ஜமாபந்தி தொடங்குகிறது.
ஒவ்வொரு ஆண்டும் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் வருவாய் தீர்வாய கணக்குகளை சரிபார்ப்பதற்கான ஜமாபந்தி நடைபெறுவது வழக்கம். ஜமாபந்தி நடைபெறும் நாள்களில் அந்தந்த கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து வருவாய்த் துறை தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் பெறப்பட்டு, விரைவான நடவடிக்கை எடுக்கப்படும்.
9 வட்டங்களில் தொடக்கம்: அதன்படி, 1427-ஆம் பசலி ஆண்டுக்கான ஜமாபந்தி ஆரணி, திருவண்ணாமலை, வெம்பாக்கம், செங்கம், கலசப்பாக்கம், கீழ்பென்னாத்தூர், செய்யாறு, வந்தவாசி, போளூர் ஆகிய 9 வட்டங்களில் வியாழக்கிழமை தொடங்கியது. மீதமுள்ள சேத்துப்பட்டு, தண்டராம்பட்டு, ஜமுனாமரத்தூர் வட்டங்களில் வெள்ளிக்கிழமை (மே 18) ஜமாபந்தி தொடங்குகிறது.
ஆரணியில்...: ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி தொடங்கியது. இதில், ஜமாபந்தி அலுவலராக மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி செயல்பட்டார். இதையொட்டி, பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை ஆட்சியர் பெற்றுக்கொண்டார்.
"இடப் பிரச்னையை தீர்க்கலாம்': இதைத் தொடர்ந்து, ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: பொதுமக்கள் தங்களின் தீராத இடப் பிரச்னைகள், நிலப் பிரச்னைகள் உள்ளிட்டவைகளை ஜமாபந்தி மூலம் தீர்த்துக் கொள்ளலாம். மேலும், குடும்ப அட்டை, வாரிசுச் சான்று பிரச்னைகள், தங்கள் பகுதிக்குத் தேவையான அரசுத் திட்டங்கள் என பல்வேறு பிரச்னைகள் குறித்து மனுக்களை அளித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
அதிகளவில் முதியோர், விதவை உதவித்தொகை கோரி மனுக்கள் வருகின்றன. குறிப்பாக, பசுமை வீடு கோரி மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. தகுதி வாய்ந்த மனுக்கள் ஆய்வு செய்யப்பட்டு, உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்படுகிறது. வரும் 30-ஆம் தேதி வரை ஜமாபந்தி நடைபெறவுள்ளது என்றார்.
தொடர்ந்து, காட்டுகாநல்லூர் பகுதியைச் சேர்ந்த 2 பேர் அளித்த மனுக்களின் அடிப்படையில், அவர்களுக்கு பசுமை வீடு கட்டுவதற்கான ஆணைகளை ஆட்சியர் வழங்கினார். அப்போது, வட்டாட்சியர் சுப்பிரமணி, மேற்கு ஆரணி வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணசாமி ஆகியோர் உடனிருந்தனர்.
திருவண்ணாமலையில்...: திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தினசாமி தலைமையில் ஜமாபந்தி தொடங்கியது. முதல் நாளில் நாயுடுமங்கலம் உள்வட்டத்தைச் சேர்ந்த மேப்பத்துறை, கீழாத்தூர், நார்த்தாம்பூண்டி, நெல்லிமேடு, சி.ஆண்டாப்பட்டு, பெரியகிளாம்பாடி, சிறுகிளாம்பாடி உள்ளிட்ட கிராமங்களுக்கான ஜமாபந்தி நடைபெற்றது.
இந்தக் கிராமங்களைச் சேர்ந்த 212 பேர் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலரும், ஜமாபந்தி அலுவலருமான பொ.ரத்தினசாமியிடம் வழங்கினர்.
இந்த மனுக்களில் 3 மனுக்கள் மீது விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டு 2 பேருக்கு பிறப்புச் சான்றுகளும், ஒருவருக்கு கணினி சிட்டாவையும் மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தினசாமி வழங்கினார்.
முகாமில், திருவண்ணாமலை வட்டாட்சியர் கே.மனோகரன், ஜமாபந்தி மேலாளர் எஸ்.தனஞ்செயன், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் ரமேஷ்குமார், தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு தனி வட்டாட்சியர் டி.கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஜமாபந்தியின் 2-ஆவது நாளான வெள்ளிக்கிழமை (மே 18) திருவண்ணாமலை வடக்கு உள்வட்டத்துக்கான ஜமாபந்தி நடைபெறுகிறது.
கீழ்பென்னாத்தூரில்...: கீழ்பென்னாத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி தொடங்கியது. மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.
வந்தவாசியில்...: வந்தவாசி வட்ட 1427-ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) வந்தவாசி வட்டாட்சியர் அலுலவகத்தில் தொடங்கியது. திருவண்ணாமலை மாவட்டப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பானு தலைமை வகித்தார். ஜமாபந்தியின் முதல் நாளான வியாழக்கிழமையன்று மழையூர் உள்வட்டத்துக்கு மழையூர், கோதண்டபுரம், சிங்கம்பூண்டி, கடம்பை, தென்கரை, ஊர்குடி, தக்கண்டராயபுரம், கீழ்புத்தூர் உள்ளிட்ட கிராம கணக்குகளை பானு தணிக்கை செய்தார். மேலும், அந்த கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை அவர் பெற்றார்.
வந்தவாசி வட்டாட்சியர்கள் கே.ஆர்.முரளிதரன், சேகர், மண்டல துணை வட்டாட்சியர்கள் சரவணன், தியாகராஜன், வட்ட வழங்கல் அலுவலர் கனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
செங்கத்தில்...: செங்கம் வட்ட வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) தொடக்க விழா வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் வட்டாட்சியர் ரேணுகா வரவேற்றார்.
ஜமாபந்தி அலுவலராக திருவண்ணாமலை கோட்டாட்சியர் உமாமகேஸ்வரி கலந்து கொண்டு, மேல்பள்ளிப்பட்டு உள் வட்டத்துக்கு உள்பட்ட கிராம மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றார். தொடர்ந்து, ஜமாபந்தியில் பெறப்பட்ட மனுக்களை உடனடியாக சம்பந்தப்பட்ட அரசுத் துறை அதிகாரிகளிடம் வழங்கி, நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதையடுத்து, பாய்ச்சல் உள்வட்டத்துக்கு வரும் 21-ஆம் தேதியும், இறையூர் உள்வட்டத்துக்கு வரும் 23-ஆம் தேதியும், செங்கத்துக்கு வரும் 25-ஆம் தேதியும், புதுப்பாளையத்துக்கு வரும் 28-ஆம் தேதியும் ஜமாபந்தி நடைபெறுவதாக வட்டாட்சியர் ரேணுகா தெரிவித்தார். இதில், வருவாய் ஆய்வாளர்கள் ராஜேந்திரன், ஜெயபாரதி, நில அளவை அலுவலர் யுவராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com