தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தைக் கண்டித்து திருவண்ணாமலை, வேட்டவலத்தில் பல்வேறு அமைப்பினர் போராட்டம்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீடு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து, திருவண்ணாமலை, வேட்டவலம் பகுதிகளில் புதன்கிழமை பல்வேறு

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீடு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து, திருவண்ணாமலை, வேட்டவலம் பகுதிகளில் புதன்கிழமை பல்வேறு அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி அந்தப் பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.
அப்போது ஏற்பட்ட வன்முறையைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் மீது போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 10 பேர் இறந்தனர். பலர் காயமடைந்தனர். பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து, திருவண்ணாமலை, வேட்டவலம் பகுதிகளில் பல்வேறு அமைப்பினர் புதன்கிழமை போராட்டங்களில்
ஈடுபட்டனர்.
திருவண்ணாமலையில்...: திருவண்ணாமலை ரவுண்டானா பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலர் வி.முத்தையன் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகக் குழு நிர்வாகிகள் இரா.தங்கராஜ், எம்.எஸ்.மாதேஸ்வரன், சி.நாராயணசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் எதிரே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயலர் சிவக்குமார், மாநிலக்குழு எம்.வீரபத்திரன் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, போலீஸார் அவர்களை கைது செய்தனர்.
திருவண்ணாமலை, அண்ணா சிலை எதிரே சேலம் - சென்னை இடையிலான பசுமை வழிச்சாலை எதிர்ப்பு இயக்கக் கூட்டமைப்பு சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் ஆர்.டி.பிரகாஷ் தலைமை வகித்தார். வழக்குரைஞர்கள் அபிராமன், பாசறை பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டங்களில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பசுமை வழிச்சாலை எதிர்ப்பு இயக்கக் கூட்டமைப்பினர் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. ஒரு கோடி நிவாரணம் வழங்க வேண்டும். பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
வேட்டவலத்தில்...: வேட்டவலம், காந்தி சிலை அருகே நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டச் செயலர் கமலக்கண்ணன் தலைமை வகித்தார். மாவட்ட இணைச் செயலர் ராமச்சந்திரன், கீழ்பென்னாத்தூர் தொகுதிச் செயலர் தமிழன்பிரபு, பொருளாளர் அமீன்முகமது உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்திய காவல் துறையினரைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com