அருணாசலேஸ்வரர் கோயிலில் நவ. 23-இல் தீபத் திருவிழா: அழைப்பிதழ் விநியோகம் தொடக்கம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா வருகிற நவம்பர் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா வருகிற நவம்பர் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, விழாவுக்கான அழைப்பிதழ் விநியோகம் வியாழக்கிழமை தொடங்கியது.
அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா புகழ் பெற்றதாகும். சுமார் 20 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் திரளும் இந்தத் திருவிழா நவம்பர் 11-ஆம் தேதி துர்கையம்மன் உற்சவத்துடன் தொடங்குகிறது. 
தொடர்ந்து, நவம்பர் 14-ஆம் தேதி கொடியேற்றமும், 20-ஆம் தேதி பஞ்ச ரதங்களின் தேரோட்டமும்,  23-ஆம் தேதி கார்த்திகை தீபத் திருவிழாவும் நடைபெறுகின்றன. இதையொட்டி, நவம்பர் 23-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவர் சன்னதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு மகா தீபமும் ஏற்றப்படுகிறது. 
இந்தத் திருவிழாவுக்கான அழைப்பிதழ் கோயில் நிர்வாகம் சார்பில் அச்சடிக்கப்பட்டு, வியாழக்கிழமை மாலை கோயிலில் அமைந்துள்ள சம்மந்த விநாயகர் சன்னதியில் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
இதையடுத்து, கோயில் முக்கியப் பிரமுகர்கள், தீபத் திருவிழா பணியில் ஈடுபடும் பல்வேறு சமூகத்தினருக்கு கோயில் இணை ஆணையர் இரா.ஞானசேகர் அழைப்பிதழை வழங்கினார். நிகழ்ச்சியில் கோயில் கண்காணிப்பாளர் நரசிம்மன், நகர அதிமுக செயலர் செல்வம், கோயில் ஊழியர்கள், பக்தர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
இதனிடையே, வெள்ளிக்கிழமை முதல் பக்தர்களுக்கு அழைப்பிதழ் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com