ரூ.1.76 கோடியில் 43 இருளர் குடும்பங்களுக்கு புதிய வீடுகள்: அமைச்சர் திறந்து வைத்தார்

வந்தவாசி அருகே தெள்ளாறு ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட மீசநல்லூரில் ரூ.1.76 கோடியில் 43 இருளர்

வந்தவாசி அருகே தெள்ளாறு ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட மீசநல்லூரில் ரூ.1.76 கோடியில் 43 இருளர் குடும்பங்களுக்கு கட்டப்பட்ட புதிய வீடுகள், சமுதாயக் கூடம் உள்ளிட்டவற்றை தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் சனிக்கிழமை திறந்து வைத்தார்.
பழங்குடியினர் பொருளாதார மேம்பாட்டுத் திட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலதன மானிய நிதித் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் ஆகியவற்றின் கீழ், மீசநல்லூர் ஊராட்சியில் சமத்துவபுரம் அருகில் ரூ.1.76 கோடியில் 43 இருளர் குடும்பங்களுக்கு சூரிய மின்சக்தி வசதி, மின்சார வசதியுடன் கூடிய புதிய வீடுகள், தெரு விளக்குகள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, சமுதாயக் கூடம், சிமென்ட்,  தார்ச்சாலைகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் திறப்பு விழா மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தலைமையில் நடைபெற்றது. ஆரணி தொகுதி எம்.பி. வெ.ஏழுமலை, செய்யாறு எம்எல்ஏ தூசி கே.மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தெள்ளாறு வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) ச.மோகன் வரவேற்றார்.
தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் புதிய வீடுகள், சமுதாயக் கூடம் உள்ளிட்டவற்றை திறந்து வைத்தார். மேலும், புதிய வீடுகளுக்கான உத்தரவை பயனாளிகளுக்கு வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
விழாவில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை செயற்பொறியாளர் பெ.இராமகிருஷ்ணன், பழங்குடியினர் நலத் துறை திட்ட அலுவலர் தி.சட்டநாதன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் பா.ஜெயசுதா, உதவிச் செயற்பொறியாளர் என்.ஆர்.செல்லபாண்டியன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ந.இராஜன்பாபு, உதவிப் பொறியாளர் பி.மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com