செய்யாறு அருகே வீடுகளில் மின் திருட்டு:  தடுப்புப் படையினர் சோதனை?

செய்யாறு அருகே வீடுகளில் மின் திருட்டு தடுப்புப் படையினர் சோதனை மேற்கொண்ட நிலையில், வந்தவர்கள் அந்தப் படையினரைச் சேர்ந்தவர்கள்தானா என்பதை மின் வாரியத்தினர்

செய்யாறு அருகே வீடுகளில் மின் திருட்டு தடுப்புப் படையினர் சோதனை மேற்கொண்ட நிலையில், வந்தவர்கள் அந்தப் படையினரைச் சேர்ந்தவர்கள்தானா என்பதை மின் வாரியத்தினர் உறுதிப்படுத்த மறுத்துவிட்டனர்.
செங்கல்பட்டை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மின் திருட்டு தடுப்புப் படையினர் மற்றும் காஞ்சிபுரத்திலிருந்து வந்த மின் திருட்டு தடுப்பு குழு உதவிச் செயற்பொறியாளர் தலைமையிலான 10-க்கும் மேற்பட்டோர் அதிரடியாக செய்யாறு வட்டம், பல்லி துணை மின் நிலையத்தைச் சேர்ந்த கிளியாத்தூர், வன்னியதாங்கல் ஆகிய கிராமங்களில் வீடுகளுக்குச் சென்று திடீரென மின் இணைப்புகளை சோதனை செய்ததாகத் தெரிகிறது.
இதேபோல, வன்னியதாங்கல் கிராமத்தில் முக்கிய பிரமுகர் வீட்டில் சோதனை செய்தபோது, மின் மீட்டரில் முறைகேடு செய்தது கண்டறியப்பட்டதால், சம்பந்தப்பட்ட வீட்டின் 
உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்து சென்ற செய்தியாளர்களிடம் எந்தத் தகவலையும் மின் திருட்டு தடுப்புப் படையினர் கூறாமல் பல்லி உதவிப் பொறியாளர் நாகராஜனிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் எனக் கூறிவிட்டு அவசர, அவசரமாக காரில் காஞ்சிபுரம் நோக்கிச் சென்றுவிட்டனர்.
பல்லி துணை மின் நிலையத்தில் தொடர்பு கொண்டு விசாரித்தபோது, சரிவர பதிலளிக்காததுடன், வந்த குழுவினர் மின் திருட்டு தடுப்புப் படையினர்தானா என்பதை உறுதிப்படுத்த மறுத்துவிட்டனர்.
இதனால், வீடுகளுக்கு வந்து சோதனையிட்டவர்கள் மின் திருட்டு தடுப்புப் படையைச் சேர்ந்தவர்களா அல்லது பணம் பறிக்கும் கும்பலா என்பது குறித்து தெரியாமல் பொதுமக்கள் குழப்பத்தில் உள்ளனர். எனவே, மின் வாரிய அதிகாரிகள் இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com