திருவண்ணாமலை, வந்தவாசியில்விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் தாக்குதல்

திருவண்ணாமலை, வந்தவாசி பகுதிகளில் சனிக்கிழமை நடைபெற்ற விநாயகர் சிலைகள் கரைப்பு

திருவண்ணாமலை, வந்தவாசி பகுதிகளில் சனிக்கிழமை நடைபெற்ற விநாயகர் சிலைகள் கரைப்பு ஊர்வலத்தில் சோடா, மதுப் புட்டிகள் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் 1,650 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு, பூஜைகள் செய்யப்பட்டு வந்தன. திருவண்ணாமலை, வேங்கிக்கால் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயர் சிலைகளைக் கரைப்பதற்கான ஊர்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை காந்தி சிலை எதிலிருந்து ஊர்வலம் தொடங்கியது. இதில், இந்து முன்னணி மாநிலப் பேச்சாளரும், வழக்குரைஞருமான டி.எஸ்.சங்கர் தலைமையில், ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதையடுத்து, இந்து முன்னணி நிர்வாகிகளும், போலீஸாரும் புடைசூழ விநாயகர் சிலைகள் ஊர்வலம் பிற்பகல் ஒரு மணிக்குத் தொடங்கியது. 100-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஒன்றன் பின் ஒன்றாக தேரடி வீதி, திருவூடல் தெரு, திருமஞ்சன கோபுரத் தெரு வழியாக சென்று கொண்டிருந்தன.
சோடா, மதுப் புட்டிகள்
வீச்சு: காமராஜர் சிலையைக் கடந்ததும் ஓரிடத்தில் சிலர் கற்களை வீசினர். தொடர்ந்து, ஸ்ரீஅங்காளம்மன் கோயில் எதிரே சென்றபோது, மர்ம நபர்கள் சோடா, மதுப் புட்டிகளை வீசித் தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு இந்து முன்னணி நிர்வாகிகளும் தாக்க முயன்றதை போலீஸார் தடுத்தனர்.
அப்போது, அந்த இடத்தில் நின்றிருந்த தனியார் சிற்றுந்து மீதும் சோடா, மதுப் புட்டிகள் வீசப்பட்டன. இதனால், சிற்றுந்தில் அமர்ந்திருந்த பயணிகள் அதிலிருந்து இருந்து இறங்கி ஓடினர். இந்தச் சம்பவங்களால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வனிதா, பயிற்சி ஆட்சியர் மு.பிரதாப் ஆகியோர் வந்து விசாரணை நடத்தினர்.
3 இளைஞர்களிடம் விசாரணை: இதையடுத்து, செய்யாறு டிஎஸ்பி குணசேகரன் தலைமையிலான போலீஸார் வீடு, வீடாகச் சென்று சோடா, மதுப் புட்டிகளை வீசியதாகக் கருதப்படும் 3 இளைஞர்களைப் பிடித்து வந்தனர். அதன்பிறகே அந்த இடத்தில் பரபரப்பு ஓய்ந்து, இயல்பு நிலை திரும்பியது. பிடிபட்ட இளைஞர்களிடம் போலீஸார் தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
125 சிலைகள் கரைப்பு: தொடர்ந்து, விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தண்டராம்பட்டு சாலையில் உள்ள தாமரைக் குளத்தில் கரைக்கப்பட்டன. நகராட்சி நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த கிரேன் இயந்திரம் மூலம் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் குளத்தில் கரைக்கப்பட்டன.
வந்தவாசியில் தடியடி: வந்தவாசியில் இந்து முன்னணி சார்பில், விநாயகர் சிலைகள் ஊர்வலம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இதில், பங்கேற்பதற்காக சனிக்கிழமை பிற்பகல் விநாயகர் சிலைகளுடன் சென்ற நெமந்தகார தெருவைச் சேர்ந்தவர்களுக்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையே கோட்டை மூலை அருகில் தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர்.
இதனால், விநாயகர் சிலையுடன் சென்ற 2 பேருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர், வந்தவாசி அங்காளம்மன் கோயில் அருகிலிருந்து 36 விநாயகர் சிலைகளுடன் விசர்ஜன ஊர்வலம் தொடங்கியது. வந்தவாசி பழைய பேருந்து நிலையம் அருகே ஊர்வலம் சென்றபோது, மற்றொரு தரப்பினர் ஊர்வலத்தின் மீது கல் வீசினர். இதையடுத்து, ஊர்வலத்தினர் கல் வீசித் தாக்கத் தொடங்கினர்.
போலீஸார் காயம்: இதைத் தொடர்ந்து, போலீஸார் இரு தரப்பினரையும் தடியடி நடத்தி கலைத்தனர். தாக்குதலில் அதிவிரைவுப் படை உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 4 போலீஸாருக்கும் மற்றும் சிலருக்கும் காயம் ஏற்பட்டது.
இதனிடையே, போலீஸார் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவில்லை எனக் கூறி ஊர்வலத்தில் சென்றவர்கள் விநாயகர் சிலைகளை எடுக்க மறுத்து போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், ஊர்வலம் ஒரு மணி நேரம் தடைபட்டது. பின்னர், திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி. சிபிசக்கரவர்த்தி தலைமையிலான போலீஸார் உரிய பாதுகாப்பு அளிப்பதாக உறுதி அளித்ததை அடுத்து ஊர்வலம் புறப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com