மதுக் கடையை இடம் மாற்றக் கோரி பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல்

டாஸ்மாக் மதுக் கடையை இடமாற்றம் செய்யக் கோரி, வாணாபாடி கிராம மக்கள் 300-க்கும் மேற்பட்டோர் அரசுப் பேருந்தை சிறைபிடித்து சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

டாஸ்மாக் மதுக் கடையை இடமாற்றம் செய்யக் கோரி, வாணாபாடி கிராம மக்கள் 300-க்கும் மேற்பட்டோர் அரசுப் பேருந்தை சிறை
பிடித்து சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில், ராணிப்பேட்டை, முத்துகடை, சிப்காட், மாந்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் செயல்பட்டு வந்த 5-க்கும் மேற்பட்ட மதுக் கடைகள் மூடப்பட்டன. இதைத் தொடர்ந்து, மூடப்பட்ட கடைகளை வாணாபாடி ஊராட்சிக்குள்பட்ட தமிழ் அன்னை வீதி, எடப்பாளையம், அம்பேத்கர் நகர், மாணிக்கம் நகர் உள்ளிட்ட 5 இடங்களில் டாஸ்மாக் நிர்வாகத்தினர் அண்மையில் திறந்தனர்.
இந்நிலையில், வாணாபாடி கிராமத்தைச் சுற்றி 5 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருவதால் கிராம பெண்கள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் சிரமத்துக்குள்ளாகி வருவதாகக் கூறி, மேற்கண்ட மதுக் கடைகளை இடம் மாற்றக் கோரி மாவட்ட நிர்வாகத்திடம் வாணாபாடி கிராம மக்கள் மனு அளித்துள்ளனர். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் ஆவேசமடைந்த வாணாபாடி கிராம பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் வாணாபாடி - ராணிப்பேட்டை சாலையில் செயல்பட்டுவரும் மதுக் கடை எதிரே சாலையில் சனிக்கிழமை அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சிப்காட் போலீஸார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவ்வழியாக வந்த அரசுப் பேருந்தை சிறைபிடித்து, கடையை இடமாற்றம் செய்வதாக அதிகாரிகள் நேரில் வந்து உறுதியளிக்கக் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த வாலாஜா வட்டாட்சியர் பிரியா, கடையை இடமாற்றம் செய்வதாக உறுதி
யளித்ததைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com