வேலூரில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா ஏற்பாடுகள்: அமைச்சர் ஆய்வு

வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெறவுள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தொடர்பான ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் கே.சி.வீரமணி சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெறவுள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தொடர்பான ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் கே.சி.வீரமணி சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
வேலூர் கோட்டை மைதானத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா செப்டம்பர் மாதம் 9-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதை முன்னிட்டு, கோட்டை மைதானத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஏற்பாடுகள் குறித்து மாநில வணிகவரி, பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன், மாவட்ட எஸ்.பி. பகலவன், வருவாய் கோட்டாட்சியர் இ.செல்வராஜ், மாநகராட்சி ஆணையர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியன், வட்டாட்சியர் எஸ்.பாலாஜி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ராணிப்பேட்டையில் ஆலோசனைக் கூட்டம்
வேலூர் மாவட்டத்தில் அடுத்த மாதம் 9-ஆம் தேதி நடைபெற உள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழா குறித்து, கிழக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவர் ஆர்.ஜி.கே. நந்தகோபால் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் அ.முகமதுஜான் வரவேற்றார். இதில், சோளிங்கர் எம்எல்ஏவும், கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான என்.ஜி.பார்த்தீபன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, பேசினார்.
கூட்டத்தில், செப்டம்பர் 9-இல் வேலூரில் நடைபெற உள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை விமரிசையாக கொண்டாடுவது, விழாவுக்கு வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வாலாஜா ஒன்றியச் செயலாளர் எம்.சி.பூங்காவனம் நன்றி கூறினார்.
இதில், முன்னாள் எம்.பி., சி.கோபால், முன்னாள் மாவட்டச் செயலாளர்கள் எல்.கே.எம்.பி. வாசு, எஸ்.ஆர்.கே.அப்பு, மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் வி.முரளி, அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலாளர் பெல் தமிழரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com