அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே விநாயகர் சிலை ஊர்வலம்: எஸ்.பி. அறிவுறுத்தல்

வேலூர் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்த வேண்டும் என மாவட்ட எஸ்.பி. பொ.பகலவன் அறிவுறுத்தினார்.

வேலூர் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்த வேண்டும் என மாவட்ட எஸ்.பி. பொ.பகலவன் அறிவுறுத்தினார்.
வேலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வல முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு வேலூர் சரக டிஐஜி
வி.வனிதா தலைமை வகித்தார்.
இதில், மாவட்ட எஸ்.பி. பொ.பகலவன் முன்னிலை வகித்துப் பேசியதாவது:
விநாயகர் சிலைகள் வடிவமைப்பதில் விதிமுறைகளைப் பின்பற்றுவதோடு, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சிலைகளுக்கு வர்ணம் பூசிக் கொள்ள வேண்டும்.  அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் செல்ல வேண்டும். 20 அடிக்குள்ளான சிலைகளைத் தான் வழிபாடு நடத்த வைக்க வேண்டும்.  
விழாக் குழுவினர் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் உரிய அனுமதி பெற்ற பிறகே சிலைகள் வைக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட இடத்தைத் தவிர்த்து வேறு பகுதியில் சிலைகள் வைக்கக் கூடாது.  போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் சிலைகள் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, வழிபாட்டுத் தலங்களில் இருந்து சுமார் 500 மீட்டர் இடைவெளி விட்டு சிலைகளை வைக்க வேண்டும்.
அதிகளவில் ஒலி எழுப்பும் கூம்பு வடிவிலான ஒலிப் பெருக்கிகளை பயன்படுத்தக் கூடாது. ஊர்வலத்தில் மது அருந்தி இருப்பவரை விழாக் குழுவினரே வெளியேற்ற வேண்டும். கைகளில் சுமந்தும், மாட்டு வண்டிகளில் விநாயகர் சிலைகளை ஊர்வலமாகவும் எடுத்துச் செல்லக் கூடாது. வாகனங்களில் மட்டுமே விசர்ஜனம் செய்ய சிலைகளை எடுத்துச் செல்லப்பட வேண்டும். அமைதியான முறையில் விநாயகர் சதுர்ததி ஊர்வலம் நடைபெற அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.
இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள 8 உள்கோட்டங்களைச் சேர்ந்த காவல் அதிகாரிகள், இந்து முன்னணி பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சோளிங்கரில்...
வாலாஜாபேட்டை, ஆக. 18: விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை அமைதியாக நடத்த வேண்டும் என அரக்கோணம் டி.எஸ்.பி. குத்தாலிங்கம் அறிவுரை வழங்கினார்.
விநாயகர் சதுர்த்தி விழா குறித்த ஆலோசனைக் கூட்டம் சோளிங்கரில் நடைபெற்றது. இதில், அரக்கோணம் டி.எஸ்.பி. குத்தாலிங்கம் கலந்து கொண்டு பேசியதாவது:
விநாயகர் சிலைகள் 8 அடி உயரத்துக்கு மேல் இருக்கக் கூடாது. ரசாயனம் இல்லாத சிலைகளை வைக்க வேண்டும். விழாக் குழுக்களைச் சேர்ந்த 2 பேர் 24 மணிநேரமும் பாதுகாப்புப் பணியில் தொடர்ந்து ஈடுபட வேண்டும்.  பொதுமக்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் அமைதியான முறையில் ஊர்வலத்தை நடத்த வேண்டும். மேலும், அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் தான் விநாயகர் சிலைகளை வைக்க வேண்டும். காலை 6 மணியில் இருந்து மாலை 6 மணிக்குள் ஊர்வலத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்றார்.
இதில்,  பாணாவரம் ஆய்வாளர் ராமலிங்கம், சோளிங்கர் உதவி ஆய்வாளர்கள் பாஸ்கரன், கருணாநிதி மற்றும் விழாக் குழுவினர் கலந்து கொண்டனர்.
வடக்கு காவல் நிலையம்...
வேலூர், ஆக. 18: விநாயகர் சதுர்த்தி விழாவை அமைதியான முறையில் நடத்த வேண்டும் என காவல் துணைக் கண்காணிப்பாளர் எஸ்.ஆரோக்கியம் அறிவுறுத்தினார்.
வேலூரில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் வடக்கு காவல் நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் எஸ்.ஆரோக்கியம் பேசியதாவது:
விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு இடையூறு ஏற்படாமல் ஒற்றுமையுடன் நடத்த வேண்டும். மத விழாவாக இருந்தாலும் அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
பிரச்னை ஏற்படும் வகையில் நடந்து கொள்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விழா சிறப்பாக நடத்த போலீஸார், வருவாய்த் துறையினருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்
என்றார்.
இதில், காவல் ஆய்வாளர்கள் பாண்டி, புகழேந்தி, ரஜினிகாந்த், இரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com