தினசரி காய்கறி மார்க்கெட்டில் இரு சக்கர வாகன நிறுத்துமிடம் அமைக்கக் கோரிக்கை

திருப்பத்தூர் சக்தி நகரில் அமைந்துள்ள காய்கறி மார்க்கெட்டில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்க  நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பத்தூர் சக்தி நகரில் அமைந்துள்ள காய்கறி மார்க்கெட்டில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்க  நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பத்தூர் பிரதான சாலை சக்தி நகர் செல்லும் நுழைவு வாயில் அருகே தினசரி காய்கறி மார்க்கெட் அமைந்துள்ளது. இங்கு மொத்தம் 159 கடைகள் உள்ளன. திருப்பத்தூரை சுற்றியுள்ள விவசாயிகள் தங்களது விளைப் பொருள்களை அதிகாலை 2 மணிக்கே கொண்டு வந்து, 4 மணிக்கு வியாபாரத்தைத் தொடங்குகின்றனர்.
இங்கு தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் காய்கறிகளை வாங்க வருகின்றனர். பெரும்பாலானோர் இரு சக்கர வாகனங்களில் வருவதால், தங்களது வாகனங்களை சாலைகளிலேயே நிறுத்துகின்றனர். இதனால் அப்பகுதி மக்களும், வியாபாரிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர். இவ்வாறு நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. குறிப்பாக, 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள், பள்ளி, கல்லூரி வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்கின்றன.
மேலும், மார்க்கெட் வளாகத்துக்கு வெளியே சாலையோரத்தில் கடை வைத்திருப்பவர்களுக்கும், பாதசாரிகளுக்கும் தினமும் வாக்குவாதம் ஏற்படுகிறது.
வளாகத்துக்குள்ளேயும், வெளியேயும் கடை வைத்துள்ளவர்களிடம் வாடகை வசூலிக்கப்படுகிறது. ஆனால், அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மழை பெய்தால் தண்ணீர் வெளியேறுவதற்கு கால்வாய், அழுகிய காய்கறிகள் மற்றும் குப்பை கொட்டுவதற்கு தொட்டி, இரவு காவலாளி இல்லாததால் பெரிதும் சிரமம் ஏற்படுவதாக வியாபாரிகள் புகார் கூறுகின்றனர்.
 மாதம் தவறாமல் வாடகை செலுத்தி வருகிறோம். ஆனால், மார்க்கெட்டிற்கு வெளியில் தரையில் அமர்ந்து காய்கறிகளை விற்பவர்களால் வியாபாரம் பாதிக்கப்படுகிறது எனக் கூறுகின்றனர்.
எனவே, மார்க்கெட் வளாகத்துக்கு வெளியே உள்ள கடைகளை அகற்றி விட்டு இரு சக்கர வாகன நிறுத்துமிடம் அமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com