பட்டினியுடன் பள்ளிக்கு வந்த பிற்பட்டோர் விடுதி மாணவிகள்: தலைமை ஆசிரியரை முற்றுகையிட்டு போராட்டம்

அரக்கோணத்தில் உள்ள அரசினர் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை விடுதி மாணவிகள் தங்களுக்கு உணவு தரப்படாததால் பட்டினியுடன்

அரக்கோணத்தில் உள்ள அரசினர் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை விடுதி மாணவிகள் தங்களுக்கு உணவு தரப்படாததால் பட்டினியுடன் வெள்ளிக்கிழமை பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அரக்கோணம் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு எதிரே தமிழ்நாடு அரசு பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை மாணவியர் விடுதி உள்ளது. இந்த விடுதியில் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் 34 மாணவிகள் தங்கியுள்ளனர்.
இந்நிலையில், விடுதியில் தங்களுக்கு உணவு தரப்படுவதே இல்லை என்றும், வெள்ளிக்கிழமை காலை பட்டினியாக பள்ளிக்கு வந்துள்ளதாகவும் கூறி பள்ளித் தலைமை ஆசிரியரை அவரது அலுவலகத்தில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதைத் தொடர்ந்து,  தலைமை ஆசிரியர் சுஜாதேவி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் இணைந்து அந்த 34 மாணவிகள் மற்றும் அதே விடுதியில் தங்கி ஜோதி வள்ளலார் அரசு நிதியுதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் படிக்கும் 5 மாணவிகளுக்கும் காலை உணவை ஓட்டலில் இருந்து வரவழைத்து கொடுத்தனர்.
இதுகுறித்து மாணவிகளிடம் கேட்டபோது,  தங்களது விடுதியில் காப்பாளராக டில்லிபாய் மற்றும் சமையலராக யசோதா ஆகிய இருவர் பணியாற்றி வருவதாகவும், இருவருமே சரிவர பணிக்கு வருவதில்லை எனவும் தெரிவித்தனர். வாரத்தில் இரு நாள்கள் மட்டுமே டில்லிபாய் பணிக்கு வருவதாகவும், காலை 11 மணிக்கு வந்துவிட்டு மாலை 4 மணிக்கே வீட்டுக்கு சென்று விடுவதாகவும் தெரிவித்தனர்.
மேலும், சமையலர் காலையில் செய்யும் உணவையே மூன்று வேளைக்கும் வைத்துக் கொள்ளுமாறு கூறுகிறாராம். சில நாள்கள் காப்பாளர் டில்லிபாய், விடுதியில் உள்ள பிளஸ் 2 மாணவிகளை சமைக்கச் சொல்கிறாராம். பல நாள்கள் தங்கள் முந்தைய நாள் உணவை பழைய சோறாக சாப்பிட்டு விட்டு மாணவிகள் பள்ளிக்கு செல்கின்றனர். மேலும், துணைக்கு யாரும் இல்லாததால் இரவு நேரத்தில் பயத்துடனே தூக்கமில்லாமல் இருப்பதாகவும் மாணவிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து விடுதியின் காப்பாளர் டில்லிபாயை கேட்டபோது, வெள்ளிக்கிழமை பணிக்கு வர சிறிது தாமதம் ஏற்பட்டதாகவும், மாணவிகள் பள்ளிக்கு வந்துவிட்ட பிறகு உணவு சமைத்து பள்ளிக்கு எடுத்து வந்திருப்பதாகவும் தெரிவித்தார். இந்த விடுதியில் 64 மாணவிகள் உள்ளதாகவும், ஆனால் 34 மாணவிகள் மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும், 5 மாணவிகள் ஜோதிவள்ளலார் நிதியுதவி பள்ளியிலும் படித்து வருவதாகவும் தெரிவித்தார். மற்ற 25 மாணவிகள் எந்த பள்ளியில் பயில்கின்றனர் என தனக்கு தெரியாது என்றார்.
உண்மையில் விடுதியில் 39 மாணவிகள் மட்டுமே தங்கி இருப்பதும், பதிவேடுகளில் 64 என காட்டப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
விடுதியில், மூன்று வேளை உணவில்லாததால் 10-க்கும் மேற்பட்டோர் காய்ச்சலில் உள்ளதாக தெரிவித்த மாணவிகள், வெள்ளிக்கிழமை வெண்ணிலா, கிரிஜா என்ற இரு மாணவிகள் உடல்நலமில்லாமல் விடுதியிலேயே தங்கி விட்டதாகத் தெரிவித்தனர். அந்த இரு மாணவிகளும் சமையலறையில் சமையலரே இல்லாத நிலையில் அவர்களே சமைக்கும் பணியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
எனவே, இதுகுறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட  பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அலுவலர் விசாரணை நடத்தி விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகளுக்கு மூன்று வேளையும் உணவளிக்க செய்து,  உண்மையான வருகைப் பதிவேட்டை ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்
விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com