திருப்பத்தூரில் வீணாகும் குடிநீர்: பொதுமக்கள் வேதனை

திருப்பத்தூரில் குடிநீர் பற்றாக்குறை உள்ள நிலையில் சில பகுதிகளில் குழாய் உடைந்து குடிநீர் வீணாக கால்வாயில் கலப்பதால் பொதுமக்கள் வேதனையடைந்துள்ளனர்.

திருப்பத்தூரில் குடிநீர் பற்றாக்குறை உள்ள நிலையில் சில பகுதிகளில் குழாய் உடைந்து குடிநீர் வீணாக கால்வாயில் கலப்பதால் பொதுமக்கள் வேதனையடைந்துள்ளனர்.
கடந்த காலங்களில் வேலூர் மாவட்டத்திலேயே குடிநீர் பற்றாக்குறையை அதிகளவு சந்தித்தது திருப்பத்தூர் நகரம் தான். தற்போது காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தால் திருப்பத்தூர் நகரில் குடிநீர் பற்றாக்குறை குறைந்துள்ளது.
மேலும், பொதுமக்களுக்கு நகராட்சி சார்பில் குழாய் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நகராட்சி கட்டடத்தை ஒட்டியுள்ள தெருவில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி அருகே உள்ள கால்வாயில் கலக்கிறது. இதுகுறித்து கடந்த 3 நாள்களாக அதிகாரிகளுக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
திருப்பத்தூர் நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளன. தற்போது நகராட்சிப் பிரதிநிதிகள் இல்லாததால், அனைத்து பொறுப்புகளையும் நகராட்சிப் பொறியாளர் பொறுப்பில் உள்ளவரே கவனிக்க வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில், 36-ஆவது வார்டுக்கு உள்பட்ட சிவசக்தி நகரில் கைப்பம்பு பழுதடைந்து சுமார் 6 மாதங்களாக சரி செய்யப்படாமல் உள்ளது. இதுதொடர்பாக நகராட்சிக்கு பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்கின்றனர்.
தண்ணீருக்காக மக்கள் ஏங்கும் நிலையில், வீணாகும் குடிநீராலும், பழுதடைந்துள்ள பைபம்பாலும் பொதுமக்கள் வேதனையடைந்துள்ளனர்.
எனவே, சேதமடைந்த குழாய் மற்றும் கைப்பம்பு ஆகியவற்றை சரி செய்ய நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com