ஹெலிகாப்டரில் பறந்து வந்த இருதயம்!

வேலூர் அருகே சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த இளைஞரின் 'இருதயம்' தானம் கொடுப்பதற்காக ஹெலிகாப்டர் மூலம் சனிக்கிழமை சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது.

வேலூர் அருகே சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த இளைஞரின் 'இருதயம்' தானம் கொடுப்பதற்காக ஹெலிகாப்டர் மூலம் சனிக்கிழமை சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது.
வேலூர் மாவட்டம், மாதனூர் அருகே வாத்தியார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தம்பதி கணேசன், கலைச்செல்வி. இவர்களுக்கு ஸ்ரீதர் (30), ஹேமானந்த், ஸ்ரீகாந்த் ஆகிய மகன்களும், சர்மிளா என்ற மகளும் உள்ளனர். திருமணமாகாத ஸ்ரீதர், மாதனூர் அருகே உணவகம் நடத்தி வந்தார்.
கடந்த வியாழக்கிழமை (ஆக.17) உணவகத்தை மூடி விட்டு இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குச் செல்வதற்காக மாதனூர் அருகே சென்ற போது எதிரே வந்த மற்றொரு இரு சக்கர வாகனம் மீது மோதியதில் ஸ்ரீதர் பலத்த காயமடைந்தார். வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஸ்ரீதருக்கு சனிக்கிழமை அதிகாலை மூளைச்சாவு ஏற்பட்டது.
இதையடுத்து அவரது குடும்பத்தினர் உடல் உறுப்புகளை தானமாக அளிக்க முடிவு செய்தனர்.
இதையடுத்து, கல்லீரல், ஒரு சிறுநீரகத்தை வேலூர் சிஎம்சி மருத்துவமனை தானமாகப் பெற்றுக் கொண்டது. இருதயத்தை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, சிஎம்சி மருத்துவமனையில் இருந்து ஸ்ரீதரின் இருதயம் வேலூர் விஐடி பல்கலைக்கழக ஹெலிகாப்டர் தளத்துக்கு பகல் 3.10 மணிக்குக் கொண்டு வரப்பட்டது.
கல்லூரி வளாகத்தில் இருந்து இருதயத்தைச் சுமந்து கொண்டு ஹெலிகாப்டர் சனிக்கிழமை 3.30 மணிக்குப் புறப்பட்டது. சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள ஹெலிகாப்டர் இறங்குதளத்தில் 4.03 மணிக்கு ஹெலிகாப்டர் தரை இறங்கியது.
துரைப்பாக்கத்தில் இருந்து 'க்ரீன் காரிடார்' போக்குவரத்து முறையை போலீஸார் கடைப்பிடித்ததால், அங்கிருந்து ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் 7 நிமிடங்களில் அந்த இருதயம், பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
அங்கு இருதய செயலிழப்பால் பாதிக்கப்பட்ட சென்னையைச் சேர்ந்த 27 வயது தச்சர் என்பவருக்கு தானம் பெறப்பட்ட இருதயம் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com